'கொடை' சீசன் முன்னேற்பாடு

கொடைக்கானல்; -கொடைக்கானலில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் இதன் முன்னேற்பாடுகள் குறித்து திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.

கொடைக்கானலில் நடைபெறும் கோடை விழா, மலர் கண்காட்சியின் போது போக்குவரத்து நெரிசலால் பயணிகள் தவிக்கும் நிலை நீடிக்கிறது. ஒவ்வொரு முறையும் இதை சீர்செய்ய அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தியும் பழைய நடைமுறையே தொடர்கிறது. இதை கட்டுப்படுத்த 2024 முதல் நீதிமன்றம் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டிற்கும் முற்றிலும் தடை விதித்து உத்தரவிட்டது. இந் நடைமுறை சரிவர பின்பற்றாத நிலையில் நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்தது. 2024ல் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் தற்போது நீதிமன்றம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்களுக்கு அளவீடு நிர்ணயம் செய்துள்ளது.

இதையடுத்து திண்டுக்கல் கலெக்டர் சரவணன் நேற்று கொடைக்கானலில் ஆய்வு செய்தார். கோடை சீசனில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தோசித்தார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகர் பகுதியில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்துவது குறித்து விவாதித்தார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார்.

சீசனில் தேவையான வசதிகள், நீதிமன்ற அறிவிப்பின்படி வாகனங்கள் அனுமதிக்கும் முறை, இதற்கு அதிகாரிகள் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நடைமுறைகள் குறித்து பேசினார். அப்போது இ பாஸ் சோதனையை வெள்ளிநீர் வீழ்ச்சியில் செய்வதை தவிர்க்க காமாக்கப்பட்டி செக் போஸ்ட்டில் தானியங்கி இ பாஸ் கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு குறித்து எஸ்.பி., பிரதீப் உடனும் ஆலோசனை நடத்தினார். ஆண்டுதோறும் சீசன் தருணத்தில் பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்ட போதும் அவை நடைமுறைக்கு சாத்தியப்படாத விஷயமாக உள்ளது. தற்போது சீசன் துவங்க இரு வாரங்களே உள்ள நிலையில் அவசர கதியில் முன்னேற்பாடுகள் செய்யப்படுவது சாத்தியமா என்பது புதிய கலெக்டரின் செயல்பாட்டில் உள்ளது.

Advertisement