தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது அறநிலையத்துறை இணையதளம்; கோயில்களில் கட்டணமின்றி பக்தர்கள் தரிசனம்

மதுரை; ஹிந்து சமய அறநிலையத்துறை இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் 24 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் ஆன்லைன் கட்டணம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கட்டணமின்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அறநிலையத்துறையை நவீனமாக்கும் ஒரு பகுதியாக 2017ல் கணினிமயமாக்கப்பட்டது. கோயில்களின் அனைத்து விபரங்களும் உள்ளடக்கிய சர்வர் உருவாக்கப்பட்டது. நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2021ல் 'அப்டேட்' செய்யப்பட்டது.

இதன்மூலம் கோயில்களில் பக்தர்கள், வாடகைதாரர்கள் செலுத்தும் கட்டணம் அனைத்தும் ஆன்லைன் மூலமே நடக்கிறது. ஒவ்வொரு கோயில்களுக்கும் உள்ள தனி இணையதளம் அறநிலையத்துறையின் இணையதளத்துடன் 'லிங்க்' செய்யப்பட்டது.

இதன்மூலம் அனைத்து கோயில்களின் வருவாயை அறநிலையத்துறை கண்காணித்து வரும் நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் முதல் தொழில்நுட்பக்கோளாறால் துறையின் இணையதளம் முடங்கியது. இதனால் ஆன்லைனில் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் கட்டணமின்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 24 மணி நேரத்திற்கு பிறகு நேற்று மதியம் இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

குழப்பம் ஏற்பட்டது



அறநிலையத்துறை ஊழியர்கள் கூறியதாவது: இதுபோன்று அவ்வப்போது சில மணி நேரம் தொழில்நுட்பகோளாறால் இணையதளம் பாதிக்கும். அச்சமயத்தில் 'பேக்கப் சர்வரை' பயன்படுத்தி ஆன்லைன் சேவை பாதிக்காமல் பார்த்துக்கொள்வர். ஆனால் நேற்றுமுன்தினம் 'பேக்கப் சர்வர்'கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு இணையதளம் முடங்கியது. பழநி உள்ளிட்ட கோயில்களில் இலவச முடிகாணிக்கையை கணக்கிட பக்தர்கள் மொட்டை எடுக்கும் முன், எடுத்த பின் படம் எடுத்து ஆன்லைனில் 'அப்லோடு' செய்யப்படும்.

இதன்அடிப்படையில் எத்தனை பேர் முடி காணிக்கை செலுத்தினர் எனக்கணக்கிட்டு அதற்குரிய தொகை வழங்கப்படும். ஆனால் சர்வர் பிரச்னையால் இதிலும் குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு கூறினர்.

Advertisement