அனுமதியின்றி வாடகை பைக்: போலீசார் பறிமுதல்

புதுச்சேரி; புதுச்சேரி நகரப்பகுதியில் அனுமதியின்றி வாடகை விடுவதற்காக நிறுத்தி வைத்திருந்த பைக்குளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி நகரின் முக்கிய வீதிகளில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிலையங்கள் சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், உரிய அனுமதியின்றி வாகனங்களை வாடகைக்கு விடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர் ராவ், எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் மிஷன் வீதி, புஸ்சி வீதி, சின்னக் கடை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி வாடகைக்கு விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், போக்குவரத்து இடையூறாக நிறுத்தியிருந்த வாகனங்கள் என, மொத்த 18 வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த வாகனங்களை போக்குவரத்து துறையிடம் ஒப்படைத்தனர்.

Advertisement