சதுரங்க வேட்டை சினிமா பாணியில் மோசடி செய்த 4 பேர் அதிரடி கைது

1

புதுச்சேரி; சதுரங்க வேட்டை சினிமா பாணியில் ரூ. 30 லட்சம் மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை, ஜான்பால் நகரை சேர்ந்தவர் சலீம்ராஜா, 60. இவருக்கு சேலம் சுந்தரம் வரதன் 60, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுந்தரம்வரதன் தன்னிடம் புதிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால், நான் அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பல மடங்கு பழைய ரூபாய் நோட்டுக்களை தருவதாக சலீம்ராஜாவிடம் கூறினார்.

அதற்கு ஆதாரமாக பெட்டி, பெட்டியாக இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வீடியோவில் காண்பித்தார். இதனை சலீம்ராஜா தனது மகன் பெரோசிடம் கூறினார். அதற்கு பெரோஷ் சம்மதம் தெரிவித்தார்.

இதுகுறித்து பெரோஷ் நண்பர்களான உதயா, சதீஷ், தினகரன் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மூவரும் தங்களிடம் உள்ள பணத்தை கொடுத்து பழைய பணம் வாங்க முடிவு செய்து மொத்தமாக ரூ.30 லட்சம் திரட்டி சலீம்ராஜா மூலமாக சுந்தரத்திடம் ஒப்படைத்தனர்.

அவர்களுக்கு சுந்தரம் செல்லாத பணம் ரூ. 2 கோடி தருவதாக கூறினார். ஆனால் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

இதுதொடர்பாக தினகரன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து, வழக்கில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் புரோக்கர்களான சுந்தர வரதன்; சென்னை அசோக் நகர் ராமானுஜம், 48; கோயம்புத்துார், மேட்டுப்பாளையம் சந்தானம், 48; சலீம்ராஜா ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

சதுரங்க வேட்டை சினிமா பாணியில் ரூ.30 லட்சம் மோசடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement