உண்மையாகவே ஒரு ஜூராசிக் பார்க்; உருவாக்கும் இந்திய விஞ்ஞானிகள்!

5

சிலிகுரி: அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை உயிரினங்களின் டி.என்.ஏ., படிமங்களை பாதுகாக்கும் முதல் உறைவு பூங்கா, மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கி, 1993ம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலப்படம் ஜூராசிக் பார்க். அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் எழுதிய நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது.


அழிந்து போன உயிரினங்களின் மரபணு படிமங்களை வைத்து, அவற்றை உயிர்ப்பிப்பார். உலகம் முழுவதும் பெரும் வரவேற்றை பெற்றது அந்த படம். அத்தகைய ஒரு ஜூராசிக் பார்க் தான், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அமைக்கப்படுகிறது.


இங்கு பத்மஜா நாயுடு இமாலய உயிரியல் பூங்காவில், அழிவின் விளிம்பில் இருக்கும் இமாலய வன உயிரினங்களின் டி.என்.ஏ., படிமங்கள் பாதுகாக்கப்படுகிறது. திரவ நைட்ரஜன் கொண்டு மைனஸ் 196 டிகிரி வெப்ப நிலையில் இரும்பு பெட்டகங்களில் பாதுகாக்கும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம், இந்தியாவின் முதல் உறைவிக்கப்பட்ட உயிரியல் பூங்கா என்ற பெருமையை இந்த பூங்கா பெறுகிறது. இந்த பூங்காவில், சிகப்பு பாண்டா, பனிச்சிறுத்தை போன்ற விலங்குகளின் டி.என்.ஏ.,க்கள், உயிரணுக்கள், கருமுட்டைகள், உயிருள்ள திசுக்கள் ஆகியவை சேகரித்து பாதுகாக்கப்படுகின்றன.


அவற்றை கொண்டு, செயற்கை கருத்தரிப்பு முறையில் விலங்குகளை இனப்பெருக்கம் செய்ய முடியும். இதற்கென பூங்கா நிர்வாகமும், ஹைதராபாத்தை சேர்ந்த மூலக்கூறு உயிரியல் மையத்துடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளது.



இதன் மூலம், வன உயிரினங்கள் அழிந்து போனாலும், அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உயிரியல் பூங்கா இயக்குநர் பசவராஜ் ஹோலியாச்சி கூறியதாவது: அழிந்து வரும் விலங்குகளில் டி.என்.ஏ.,வை சேகரித்து வருகிறோம். இவை இனப்பெருக்கம் மற்றும் பரிணாம உயிரியலுக்கு இன்றியமையாதவையாக இருக்கும்.


எதிர்காலத்தில் சேமிக்கப்பட்ட மரபணுப்பொருட்கள் அழிந்து வரும் இனங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து வன விலங்கு தலைமை காப்பாளர் தேபல் ராய் கூறுகையில், 'வன விலங்குகளின் டி.என்.ஏ., மாதிரிகளை சேமித்து வைக்க இந்த பூங்கா மிகவும் உதவும்.


நாங்கள் வன விலங்குகளிடம் இருந்து திசு மாதிரிகளை சேகரிப்போம். ஒரு விலங்கு இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தால் அவற்றின் திசு மாதிரிகளை எடுத்து இந்த பூங்காவில் பாதுகாக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

Advertisement