நியூசிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: முதல் 'டி-20' போட்டியில்

கிறைஸ்ட்சர்ச்: முதல் 'டி-20' போட்டியில் ஏமாற்றிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் (0), ஹசன் நவாஸ் (0) மோசமான துவக்கம் கொடுத்தனர். இர்பான் கான் (1), ஷதாப் கான் (3), அப்துல் சமத் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். குஷ்தில் ஷா (32), கேப்டன் சல்மான் ஆகா (18), ஜஹாந்தத் கான் (17) ஆறுதல் தந்தனர். பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 91 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. முகமது அலி (1) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 4, கைல் ஜேமிசன் 3, இஷ் சோதி 2 விக்கெட் கைப்பற்றினர்.
சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட், ஆலன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது செய்பெர்ட் (44) அவுட்டானார். பின் இணைந்த ஆலன், டிம் ராபின்சன் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. நியூசிலாந்து அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 92 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆலன் (29), ராபின்சன் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் ஜேமிசன் வென்றார். நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.