கால்பந்து: பாலா தேவி 'ஹாட்ரிக்'

கோல்கட்டா: பாலா தேவி 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுக்க ஸ்ரீபூமி அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில், பெண்கள் கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) 8வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த 8வது சுற்று லீக் போட்டியில் ஸ்ரீபூமி, சேது அணிகள் மோதின. இதில் ஸ்ரீபூமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. ஸ்ரீபூமி அணி சார்பில் பாலா தேவி 'ஹாட்ரிக்' கோல் (39, 49, 65வது நிமிடம்) அடித்தார். சேது அணிக்கு ஹதிஜா நந்தகோ (37 வது நிமிடம்), லிஷாம் பாபினா தேவி (89வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த மற்றொரு போட்டியில் நிடா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹோப்ஸ் அணியை வென்றது. நிடா அணிக்கு மணிஷா நாயக் 2 கோல் (60, 63வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார்.
ஸ்ரீபூமி அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில், 4 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. சேது, நிடா அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 5, 6வது இடத்தில் உள்ளன. ஹோப்ஸ் அணி (1 புள்ளி) கடைசி 8வது இடத்தில் உள்ளது.

Advertisement