திருப்போரூரில் ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் பணிகளை துரிதப்படுத்த உருவாகிறது தனிப்பிரிவு
சென்னை:சென்னையின் குடிநீர் தேவைக்காக திருப்போரூர் அருகே, 350 கோடி ரூபாயில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணிளை துரிதப்படுத்த, நீர் வளத்துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த ஏரிகளின் 13.2 டி.எம்.சி.,மொத்த கொள்ளளவு உடையவை. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் குடிநீர் தேவைக்கு கைகொடுக்கிறது.
சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை, 1 டி.எம்.சி.,யாக உள்ளது. மக்கள்தொகை பெருக்கம், சென்னை விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால், குடிநீர் தேவை இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, கூடுதல் நீராதாரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதைகருத்தில் கொண்டு, திருப்போரூர் அருகே, 350 கோடி ரூபாயில் புதிய நீர்தேக்கம் உருவாக்கப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பாலாறு வடிநில வட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளுக்கு மத்தியில், இந்த புதிய நீர்தேக்கம் அமையவுள்ளது. இதற்காக, தமிழக உப்பு நிறுவனம் உட்பட அரசிற்கு சொந்தமான 4,735 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலங்கள் கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், காலவாக்கம், நெம்மேலி ஆகிய கிராமங்களை ஒட்டி அமைந்துள்ளது.
பயன்படுத்தப்படாத இந்த நிலங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலங்களில் மானாமதி மவுடு, தையூர், காலவாக்கம் ஏரிகளில் இருந்து வெள்ள உபரிநீர் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், 3 டி.எம்.சி.,க்கு மேல் நீர் தேங்கி வீணாகிறது.
எனவே, ஆண்டுதோறும், 2.25 டி.எம்.சி., நீரை சேமிக்கும் வகையில் நீர்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. இங்கு, 1.60 டி.எம்.சி., கொள்ளளவில் நீர்தேக்கம் அமையவுள்ளது.
இதன்வாயிலாக நாள்தோறும், 170 எம்.எல்.டி., குடிநீர் சென்னைக்கு வினியோகிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இப்பணியை விரைந்து மேற்கொள்ள, நீர்வளத்துறையில் தனிப்பிரிவு துவங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !