*மண்டலங்களில் ஒருங்கிணைப்பின்றி சுகாதார அதிகாரிகள்...முறைகேடு? *கட்டடங்களை ஆய்வு செய்யாமல் சான்றளிப்பதாக சர்ச்சை

சென்னையில் கட்டட ஆய்வு செய்யாமலேயே சுகாதார அதிகாரிகள் தன்னிச்சையாக கையெழுத்திட்டு, சான்றிதழ் வழங்குவதாகவும், இது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் கையெழுத்து இல்லாததால், சான்றின் உண்மைத்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டு, அரசு துறைகளால் திருப்பி அனுப்பப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

சென்னையில், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, விடுதி, ஹோட்டல் உள்ளிட்ட கட்டடங்களுக்கு, ஆண்டுதோறும் சுகாதார சான்று பெறுவது கட்டாயம்.

சான்று பெற, நிறுவனத்தினர், கட்டட உறுதி தன்மை, தீயணைப்பு, வரி செலுத்தியது, வாடகை பத்திரம் உள்ளிட்ட சான்றுகளுடன், மாநகராட்சி சுகாதாரத் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

வார்டு சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் ஆகியோர், கட்டடத்தை ஆய்வு செய்வர். அங்கு, காற்றோட்ட வசதி, உணவருந்த தனி இடம், கழிப்பறை, குப்பை தொட்டி வசதி, குடிநீர் தொட்டி, கழிவுநீர் குழாயில் வடிகட்டி அமைப்பது, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்வர்.

இவற்றை உறுதி செய்த பின், சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் ஆகியோர், மண்டல சுகாதார அதிகாரிக்கு பரிந்துரைப்பர்.

அனைத்து வசதிகளும் இருந்தால், இந்த மூன்று அலுவலர்கள் கையெழுத்திட்ட சுகாதார சான்று வழங்கப்படும். இந்த நடைமுறை, சென்னை மாநகராட்சியில், 25 ஆண்டுகளாக உள்ளது.

ஆனால், பெருங்குடி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட சில மண்டலங்களில், நிறுவனங்களை ஆய்வு செய்யாமல், சுகாதார சான்று வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

அதுவும், வார்டு சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் ஆகியோர் பரிந்துரை, கையெழுத்து இல்லாமல் சுகாதார சான்று வழங்கப்படுகிறது.

பொதுவாக, விண்ணப்பம் மீது சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் ஆய்வு செய்ய இரண்டு மூன்று நாட்கள் ஆகும். ஆனால், விண்ணப்பித்த அன்றே ஆய்வு செய்யாமல் சுகாதார சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில், ஓராண்டில் மட்டும் நுாற்றுக்கும் மேற்பட்ட சுகாதார சான்றிதழ், முறையாக ஆய்வு செய்யாமல் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, பெருங்குடியை சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:

எங்கள் பள்ளிக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் சுகாதார சான்று வாங்கி வருகிறோம். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் ஆய்வுக்கு வராமல், அவர்கள் கையெழுத்து இல்லாமல், சுகாதார சான்று வழங்கப்பட்டு உள்ளது.

அடையாறு, தேனாம்பேட்டை போன்ற மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் கேட்டபோது, மூன்று பேர் கையெழுத்துடன் சான்றிதழ் தருவதாக கூறினர்.

சுகாதார சான்றிதழை வைத்து, வேறு பயன்பாட்டுக்கு அரசிடம் முறையிட்டால், போலி சுகாதார சான்றிதழாக இருக்குமோ என, சந்தேகத்தில் கோப்புகளை திருப்பி அனுப்புகின்றனர்.

மாநகராட்சியில் ஒரே மாதிரியான சுகாதார சான்றிதழ் வழங்குவதை கமிஷனர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுகாதார அலுவலர்கள் கூறியதாவது:

ஒரு சில மண்டல சுகாதார அதிகாரிகள், அரசியல் பின்புலத்தில் இருப்பதால், சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர்களை ஆய்வுக்கு அனுப்பாமல், மாநகராட்சி விதிகளை மீறி, தங்கள் இஷ்டம்போல் சான்று வழங்கி, முறைகேடில் ஈடுபடுகின்றனர்.

அப்படி வழங்கிய நிறுவனத்தில், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், எங்களை மேல் அதிகாரிகள் தண்டிப்பர். அவர்களால் எங்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. விதிமீறி செயல்படும் அதிகாரி இடமாறி, அடுத்த வரும் அதிகாரி, அதே தவறை தொடர வாய்ப்புள்ளது.

இதுபோன்ற தவறுகள், பொது சுகாதாரத்துறையில் இருந்து, அயல் பணியாக வரும் சுகாதார அதிகாரிகளால் நடக்கிறது. இதை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில், எங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தொடரும் முறைகேடு




* கடந்த 2014ம் ஆண்டு, போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கியதாக மூன்று சுகாதார ஆய்வாளர்கள் சிக்கினர்* கடந்த 2017ல், 100 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க வேண்டி, போலி இறப்பு சான்றிதழ் கொடுத்த சம்பவம் நடந்தது* கடந்த 2019ம் ஆண்டு, ஒரு சான்றிதழுக்கு, 15,000 முதல் 25,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்று, 76 நிறுவனங்களுக்கு போலி சுகாதார சான்றிதழ் வழங்கியது வெளிச்சத்துக்கு வந்தது* சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் கையெழுத்து இல்லாமல், நுாற்றுக்கணக்கான சான்றிதழ் புழக்கத்தில் உள்ளது. கமிஷனர் தலையிட்டு, இந்த சான்றிதழில் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.




- நமது நிருபர் -

Advertisement