சச்சின் அணி சாம்பியன்: மாஸ்டர்ஸ் லீக் தொடரில் அசத்தல்

ராய்ப்பூர்: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சச்சினின் இந்திய அணி கோப்பை வென்றது. பைனலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

இந்தியாவில், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ('டி-20') முதல் சீசன் நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என 6 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்றனர்.


சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த பைனலில், சச்சின் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி, லாரா வழிநடத்திய வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை சந்தித்தது. ஜாம்பவான்களான சச்சின், லாரா விளையாடியதால், மைதானத்தில் ரசிகர்கள் (47,322) குவிந்தனர்.


'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் லாரா (6) ஏமாற்றினார். டுவைன் ஸ்மித் (45), சிம்மன்ஸ் (57) கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அம்பதி ராயுடு, கேப்டன் சச்சின் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது சச்சின் (25) அவுட்டானார். அம்பதி ராயுடு (74) அரைசதம் கடந்தார். யூசுப் பதான் (0) ஏமாற்றினார். பின் இணைந்த யுவராஜ் சிங் (13*), ஸ்டூவர்ட் பின்னி (16*) ஜோடி கைகொடுத்தது. இந்திய அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement