குடும்பத்துடன் நேரம்...கோலி ஆர்வம்

1

பெங்களூரு: ''ஓட்டல் அறையில் தனிமையில் அமர்ந்திருக்க விரும்பவில்லை. அருகில் குடும்பத்தினர் இருந்தால், களத்தில் சந்தித்த கடினமான சூழ்நிலையை பகிர்ந்து கொண்டு விரைவாக மீளலாம்,''என கோலி தெரிவித்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தது. முன்னணி வீரர்களுடன், குடும்பத்தினரும் தங்கியிருந்தனர். ஆட்டத்தில் கவனம் சிதறியதற்கு குடும்பத்தினர் தான் காரணம் என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கருதியது. இதையடுத்து, 45 நாளுக்கு அதிகமான வெளிநாட்டு தொடரின் போது, இரு வாரங்களுக்கு பின் தான் தோழி, மனைவி, குழந்தைகளை (18 வயது வரை) சந்திக்க இயலும். உடன் 14 நாள் மட்டுமே தங்க முடியும். சிறிய தொடர் என்றால், ஒரு வாரம் தங்கலாம். குடும்பத்தினருக்கான செலவை வீரர்களே ஏற்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கோலி உள்ளிட்ட 'சீனியர்' வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தோல்வியில் இருந்து மீண்ட இந்திய அணியினர், சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தினர். இத்தொடரின் போது கோலி, அவரது மனைவி அனுஷ்கா, ஜடேஜாவின் மனைவி, ஷமியின் குடும்ப உறுப்பினர்கள் துபாய் வந்திருந்தனர். இவர்களுக்கான செலவை வீரர்களே ஏற்றனர்.

பி.சி.சி.ஐ., கட்டுப்பாடு குறித்து கோலி 36, கூறியது: வாழ்க்கையில் குடும்பத்தினரின் பங்களிப்பை விவரிப்பது கடினம். வெளியே ஏதாவது கடின சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தால், ஆறுதல் தேடி குடும்பத்திற்கு தான் வருகிறோம். மனம் விட்டு பேசுகிறோம். குடும்பத்தின் மதிப்பை புரிந்து கொள்ள தவறுகின்றனர்.


மகிழ்ச்சியான இடம்: போட்டி முடிந்ததும் ஓட்டல் அறைக்கு திரும்பி தனிமையில் சோகமாக அமர்ந்து இருக்க விரும்பவில்லை. சகஜமான மனிதராக வாழ விரும்புகிறேன். குடும்பத்தினர் அருகில் இருந்தால், களத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தில் இருந்து விரைவாக மீள முடியும். போட்டியில் நமக்கு உள்ள பொறுப்பை உணர முடியும். ஒவ்வொருவரும் தங்களது கடமையை முடித்து விட்டு வீட்டுக்கு தான் வருகின்றனர். குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர். வாழ்க்கை இப்படி தான் செல்கிறது. என்னை பொறுத்தவரை குடும்பத்துடன் செலவிட கிடைத்த நேரத்தை ஒருபோதும் 'மிஸ்' செய்ததில்லை. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.

கட்டுப்பாடு அவசியமா: வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது. போட்டியில் எவ்வித தொடர்பும் இல்லாதவர்கள் இத்தகைய சர்ச்சையை கிளப்புகின்றனர். இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். 'குடும்பத்தினர் எப்போதும் உங்களுடன் தான் இருக்க வேண்டுமா என எந்த ஒரு வீரரிடமும் கேட்டுப் பாருங்கள்...'ஆம்' என்று தான் பதில் சொல்வார்.இவ்வாறு கோலி கூறினார்.



அம்மாவை சமாளிப்பது...


உடலை 'பிட்' ஆக வைத்திருப்பதில் கோலிக்கு அக்கறை அதிகம். சரியான உணவை எடுத்துக் கொள்வார். 'ஜிம்' சென்று பல மணி நேரம் பயிற்சி செய்வார். ஆனாலும், அவரது அம்மாவுக்கு திருப்தி இல்லையாம். இது பற்றி கோலி கூறுகையில்,''உடற்தகுதி விஷயத்தில் இந்திய அணியின் விதிமுறைகள் எனக்கு கடினம் அல்ல. எனது அம்மாவை சமாளிப்பது தான் கடினம். புரோட்டா போன்ற உணவுகளை நான் அதிகம் எடுத்துக் கொள்ளாததால், களத்தில் பலவீனமாக தோற்றம் அளிப்பதாக கூறுவார். 'மற்ற நாட்டு வீரர்கள் எல்லாம் எனது பயிற்சி, சிறப்பான உடற்தகுதியை பார்த்து வியந்து கேட்கின்றனர். நீங்கள் பலவீனமாக இருப்பதாக சொல்கிறீர்கள். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கவலைப்படாதீர்கள்' என சொல்லி சமாதானம் செய்வது வழக்கம்,''என்றார்.

Advertisement