பேச்சு, பேட்டி, அறிக்கை

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி:

தினமும் செய்தியில் வர வேண்டும் என்பதற்காக, மத்திய அமைச்சர் முருகன் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். இருமொழி கற்றவர்கள் தான், உலகம் முழுதும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மத்திய அரசு எவ்வளவு பிரச்னை செய்தாலும், தமிழக அரசு தைரியமாக செயல்பட்டு வருகிறது. அதைப் பொறுக்க முடியாத அண்ணாமலை, எதிர்த்துக் கொண்டுதான் இருப்பார்.

'நானும் உங்க கூட்டணியில் தான் இருக்கேன்'னு அடிக்கடி இந்த மாதிரி பேட்டி கொடுத்து, தி.மு.க.,வுக்கு நினைவூட்டுகிறாரோ?



பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:



இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் ரயில்வே உதவி ஓட்டுநர் பணிக்கான இரண்டாம் கட்ட கணினி முறை தேர்வுகள் வரும் 19ல் நடக்கிறது. தமிழக மாணவர்களுக்கு ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வடமாநில இளைஞர்கள் எத்தனை பேர், தமிழகத்துல ரயில்வேயில வேலை பார்க்கிறாங்க தெரியுமா... நம்ம ஊர் பசங்க தேர்வு எழுத பக்கத்து மாநிலத்துக்கு போகவே சிரமப்பட்டா என்ன அர்த்தம்?


அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:



தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்த, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, காஸ் சிலிண்டர் மானியம், பழைய ஓய்வூதியத் திட்டம், மாதம் ஒருமுறை மின் கட்டணம், கல்விக்கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதியையும் இந்த பட்ஜெட் வழியே நிறைவேற்றவில்லை.
நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம், அடுத்த வருஷ தேர்தல் அறிக்கையில சேர்த்துடுவாங்க, பாருங்க!


முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:



கொள்ளை என்பதே இங்கே கொள்கை ஆகிப்போச்சு. திருடுவது இப்போது திறமையென ஆச்சு. அதில் தலைசிறந்த திறமைகளே தலைமை என ஆச்சு. தொண்டூழியம் என்பதெல்லாம் பெண்டூழியம் ஆச்சு. டெண்டர்களே கட்சிகளுக்கு தொண்டர்கள் என ஆச்சு. குறையறிவு இருந்தாலும், கோடிகளுக்கு வேலை செய்யும் இரவல் மூளைகளை இறக்குமதி செய்வதுதான், இப்போது பேஷன் ஆகிப் போச்சு.
இவரது ஆதங்கத்தைப் பார்த்தால், நாட்டுல இருக்கிற எல்லா கட்சிகளையும் திட்டுற மாதிரி தெரியுதே!

Advertisement