ஏமனில் அமெரிக்கா தாக்குதல்: ஹவுதி அமைப்புக்கு கடும் எச்சரிக்கை

1

வாஷிங்டன்: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023 அக்டோபரில் போர் துவங்கியது.

இந்தப் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது. ஈரானின் ஆதரவு பெற்றது ஹவுதி பயங்கரவாத அமைப்பு.

போர் நடந்தபோது, செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும், பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஹவுதி பயங்கரவாத அமைப்பு சமீபத்தில் எச்சரித்தது.

இந்நிலையில், ஏமனில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், 31 பேர் உயிரிழந்தனர்; 101 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில் டிரம்ப் கூறியதாவது:

ஹவுதி பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை. உங்களுடைய நேரம் முடிந்து விட்டது. உங்களுடைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், நரகத்தை நீங்கள் பார்ப்பீர்கள். இதுவரை பார்த்திராத தாக்குதல்களை சந்திப்பீர்கள்.

இந்த பயங்கரவாத அமைப்புக்கு அளிக்கும் ஆதரவை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். அமெரிக்க மக்களையும், அமெரிக்க வரலாற்றிலேயே அதிக ஓட்டுகளில் வென்ற அதன் அதிபரையும் மிரட்டி பார்க்க வேண்டாம். கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டாம். இவற்றை நிறுத்தாவிட்டால், உங்களை நாங்கள் பொறுப்பாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement