ஹெல்மெட் போடாத லாலு மகனுக்கு அபராதம் ஆட்டம் போட்ட போலீசுக்கு டிரான்ஸ்பர்

1

பாட்னா: பீஹாரில் ஹோலி கொண்டாடியபோது, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும், சீருடையில் அவருடன் ஆட்டம் போட்ட பாதுகாப்பு போலீஸ்காரர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநில முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத், ரப்ரி தேவி தம்பதியின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். முன்னாள் அமைச்சரான அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹோலி கொண்டாட்டம்

ஹோலியையொட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர், காலையில், தன் நண்பர் ஒருவருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பாட்னா நகர வீதிகளில் வலம் வந்தார். முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டு அருகிலும் அவர்கள் பைக்கில் சுற்றினர்.

வீடு திரும்பிய தேஜ் பிரதாப், உற்சாக மிகுதியில் நடனம் ஆடியதோடு, தன் பாதுகாவலரான தீபக் என்ற போலீஸ்காரரையும் ஆடும்படி கூறினார்.

சோபாவில் அமர்ந்தபடி, 'தீபக், இன்னைக்கு ஹோலி. நாங்க போடுற பாட்டுக்கு இடுப்பை வளைச்சி நல்லா ஆடணும். இல்லைன்னா சஸ்பெண்ட் பண்ணிருவோம்' என தெரிவித்தார்.

இதனால், போலீஸ்காரர் தீபக், சீருடையில் குத்துப் பாட்டுக்கு நடனமாடினார்.

தேஜ் பிரதாப்பின் இந்த இரண்டு வீடியோக்களும் பீஹார் முழுதும் பரவிய நிலையில், ஆட்டம் போட்ட போலீஸ்காரர் தீபக், பாதுகாப்பு பணியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டு, உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் பணிக்கு அனுப்பப்பட்டார்.

இதற்கிடையே, முதல்வர் வீட்டு முன், ஹெல்மெட் அணியாமல் தேஜ் பிரதாப் சுற்றித் திரிந்த பைக்கை போலீசார் அடையாளம் கண்டனர்.

இன்சூரன்ஸ் இல்லை

அதன் உரிமையாளரிடம் விசாரித்தபோது, இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்ற எதுவுமே அந்த பைக்குக்கு இல்லை என தெரிய வந்தது.

இதையடுத்து, ஹெல்மெட் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது போன்ற குற்றங்களுக்காக, பாட்னா போக்குவரத்து போலீசார் 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement