ஆச்சான் குளக்கரையில் வெடிப்பு மண் அரிப்பு: விவசாயிகள் அச்சம்

சூலுார்; நீலம்பூர் ஆச்சான் குளக்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு மற்றும் வெடிப்புகளால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலம்பூர் ஊராட்சியில், 400 ஏக்கர் பரப்புள்ள ஆச்சான் குளம் உள்ளது. மாவட்டத்திலேயே அதிக பரப்புள்ள குளங்களில் ஒன்றான இக்குளத்தில் நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், சுற்றுவட்டார கிராமங்களின் விவசாயத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இக்குளத்தில் தற்போது, அதிகளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், குளக்கரையில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மற்றும் மண் அரிப்புகளால் விவசாயிகளும், சுற்றுவட்டாரத்தில் குடியிருப்போரும் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுவட்டார விவசாயிகள் கூறியதாவது:
மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்துள்ள ஆச்சான் குளத்தால் எங்கள் பகுதி விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், குளக்கரையை ஒட்டி, தடுப்பு சுவர்கள் குறிப்பிட்ட துாரத்துக்கு கட்டப்பட்டன. குளக்கரை மண் அடைக்கப்பட்டன.
ஆனால், தற்போது, குளக்கரையின் பல பகுதிகளில் இரு புறமும் மண் அரிப்பு ஏற்பட்டு, குழிகள் உண்டாகி உள்ளன. கரை முழுக்க தொடர் வெடிப்புகள் ஏற்பட்டு வலுவிழந்து வருகின்றன. இதனால், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் கன மழை காரணமாக குளக்கரை உடைந்து தண்ணீர் முழுக்க வெளியேறியது. பலரும் பாதிக்கப்பட்டனர். அதனால், நீர் வளத்துறை அதிகாரிகள் உடனடியாக குளக்கரையை கள ஆய்வு செய்யவேண்டும். பருவ மழைக்காலம் வரும் முன் கரையை பலப்படுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !