அரசு மருத்துவமனையில் தீ உயிர் தப்பிய நோயாளிகள்

குவாலியர்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, மகப்பேறு பிரிவின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள, 'ஏசி' யில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் அலறினர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்ட மருத்துவமனை ஊழியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் இருந்த நோயாளிகளை மீட்க உள்ளே நுழைய முயன்றனர். ஆனால், தீ வேகமாக பரவியதால் உள்ளே செல்ல முடியவில்லை.

இதையடுத்து, பக்கவாட்டில் இருந்த அந்த அறையின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து, உள்ளே சிக்கி இருந்த 13 நோயாளிகளையும் பத்திரமாக வெளியேற்றினர். இதற்கிடையே, அந்த அறையில் ஏற்பட்ட தீ, மற்ற அறைகளுக்கும் பரவியது. மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகளையும் உடனுக்குடன் மருத்துவமனை ஊழியர்கள் வெளியேற்றினர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மருத்துவமனையில் இருந்த, 190க்கும் மேற்பட்ட நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement