'மாணவர் மனசு' புகார் பெட்டி; ஆலோசனை வழங்கி தீர்வு

1

மேட்டுப்பாளையம்;
காரமடை கல்வி வட்டாரத்தில் 144 அரசு பள்ளிகளில் 'மாணவர் மனசு' என்னும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. பள்ளிகளில் உள்ள நிறை குறைகள், வீட்டில் சொல்ல முடியாத பிரச்னைகள் என புகார் பெட்டியில் கடிதம் எழுதி போடுகின்றனர்.

காரமடை கல்வி வட்டாரத்தில் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 144 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறைக்கு முன் 'மாணவர் மனசு' புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்களின் புகார் கடிதத்தை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், ஆசிரியர்கள், பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், என மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு பள்ளி வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 'மாணவர் மனசு' பெட்டியில் போடப்படும் புகார்களை 2 வாரத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கும் முன்பாக பிரித்து பார்த்து, அதில் மாணவர்கள் தெரிவித்துள்ள புகார்களை நிவர்த்தி செய்ய தீர்வு காணுகின்றனர்.

இந்த புகார் பெட்டியில் பெரும்பாலும் பள்ளி அளவில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய புகார்களை தான் மாணவர்கள் அதிகம் தெரிவிக்கின்றனர். அவற்றை பள்ளி நிர்வாகம் உடனடியாக சரிசெய்து விடுகின்றனர்.

வீட்டில் பெற்றோரிடம் சொல்ல முடியாதவற்றை சில மாணவர்கள் மனம் திறந்து கடிதமாக எழுதி போடுகிறார்கள். இதையடுத்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.

மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் மாணவர்களின் மனசில் உள்ளவற்றை எடுத்துக் கூறுகின்றனர்.

அதே போல், பள்ளி செல்லா குழந்தைகள், நண்பர்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் போன்றவை குறித்தும் வரும் புகார் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாணவர் மனசு புகார் பெட்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 144 பள்ளிகளில் வைக்கப்பட்டது. இதுவரை 50க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் தீர்வு காணப்பட்டுள்ளது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement