வெனிசுலா நாட்டை சேர்ந்த 200 பேர்; எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா

3


வாஷிங்டன்: வெனிசுலாவை சேர்ந்த போதை கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் 200க்கும் மேற்பட்டோரை, எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.


அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டிரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், வெனிசுலாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள், போதை கடத்தும் டிரென் டி அரகுவா குழுவை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை, எல் சால்வடார் நாட்டுக்கு, அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, அனுப்பி வைத்துள்ளது.

அந்த நாட்டில் கொடிய குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்காக, வனப்பகுதியை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள தனிமை சிறையில் இவர்கள் அடைக்கப்படுவர்.
போர்க்காலத்தில் மட்டுமே பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பிரத்யேக சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன், இப்படி கைதிகளை வேறு நாட்டு சிறைக்கு அனுப்பிய நடவடிக்கை இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் சட்டத்தை 14 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களை சிறையில் வைத்து பராமரிக்கத் தேவையான நிதியுதவியையும் அளிக்க எல் சால்வடார் நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

Advertisement