சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!

சென்னை: சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., இடையே காரசார விவாதம் நடந்தது. பிறகு குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பும், 63 பேர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்த நிலையில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அவையை விட்டு சபாநாயகர் அப்பாவு வெளியேறினார். துணை சபாநாயகர் அவையை நடத்தினார்.
சட்டசபையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: அவை தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை.
ஆளுங்கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப குறைந்த நாட்களே சபாநாயகர் அவையை நடத்தி உள்ளார். கருப்பு சட்டை அணிந்து வந்ததால் அ.தி.மு.க., உறுப்பினர்களை காண்பிக்காமல் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்வதா?
அ.தி.மு.க., சார்பாக கொடுக்கப்படும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை; அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தால் "போங்க... போங்க..." என்று சபாநாயகர் கிண்டல் செய்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
துரைமுருகன் பதில்
இதற்கு, 'சபாநாயகர் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் வேண்டுமானாலும் சொல்லுங்கள், நாங்கள் பதில் சொல்கிறோம்' என்றார்
முதல்வர் ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சபாநாயகர் மீதான தவறுகளை எடுத்துச் சொல்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. கடந்த கால சம்பவங்களுக்கும், அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?
நாங்களும் பேச ஆரம்பித்தால் அவையில் மீண்டும் கூச்சல் ஏற்படும். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அப்பாவு; பணிவானவர். அதே நேரத்தில் கண்டிப்பானவர். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அவையின் கட்டுக்கோப்பு போய் விடும்.
அப்பாவு கனிவானர், அதேநேரத்தில் கண்டப்பானவரும் கூட. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கண் ஜாடையாக கூட அப்பாவுவிடம் பேசியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சபாநாயகர் அப்பாவு ஜனநாயக கொள்கையில் நம்பிக்கை உடையவர்.
எதிர்க்கட்சி உறுப்பினரர்கள் மீதும் பாசமும், பற்றும் உடையவர் சபாநாயகர் அப்பாவு. அமளியில் ஈடுபடுவர்களை அமைதிப்படுத்தவே சபாநாயகர் விரும்புவார். அவையில் இருந்து வெளியேற்ற விரும்ப மாட்டார். அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்னையை திசைத்திருப்ப இந்த தீர்மானமா? இவ்வாறு அவர் பேசினார்.
வி.சி.க., காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தோல்வி
பிறகு குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து டிவிசன் அடிப்படையில் நடத்தப்பட்ட எண்ணி கணிக்கும் ஓட்டெடுப்பிலும் தோல்வி அடைந்தது.
154 பேர் எதிர்ப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் குரல், டிவிஷன் என இருமுறைகளிலும் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு. இத்தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பும், 63 பேர் ஆதரவும் தெரிவித்திருந்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பா.ம.க., கலந்து கொள்ளவில்லை.











மேலும்
-
உண்மையான அக்கறை எனில் டாஸ்மாக் முறைகேட்டில் நடவடிக்கை அவசியம்; த.வெ.க., வலியுறுத்தல்
-
என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்