பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு

42


சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழலை கண்டித்து பா.ஜ., நடத்தும் போராட்டத்தை வரவேற்பதாக, விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு புறப்பட்டு சென்ற மாநில தலைவர் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டார்.


இது குறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் கூறியதாவது: சட்டம் ஒழுங்கு என்ற அடிப்படையிலே அந்த நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால் இந்த போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மதுபானம் முற்றிலுமாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். கடைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு.


எங்கள் நிலைப்பாட்டுக்காக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக, அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற ஒரு உத்தியாக இதை கையாள்கிறார்கள் என்றால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.


பா.ஜ., ஆளும் மாநிலங்களில், மது ஒழிப்பு கொள்கைகளை அவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்களா என்ற கேள்வியும் இன்னொரு புறம் எழுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களிலும் மது ஒழிப்பை நடைமுறைப் படுத்தினால் நாம் முழு மனதுடன் வரவேற்கலாம். பாராட்டலாம்.


தேர்தல் வாக்குறுதி படி மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க., அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். இவ்வாறு திருமாளவன் கூறினார்.

Advertisement