கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

1


திருவனந்தபுரம்: கேரளாவில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், புற ஊதா கதிர்வீச்சு எனப்படும் யூ.வி., கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. நடந்து செல்பவர்கள் குடை இல்லாமல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிலவும் கடுமையான வெயிலால் மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 மாவட்டங்களில் புற ஊதா கதிர்வீச்சு எனப்படும் யூ.வி., கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யூ.வி., கதிர்வீச்சு மனிதர்களின் உடலில் படும் போது கடுமையான கண் பிரச்னை உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

இந்த நிலையில், பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பத்தினம்திட்டாவில் யூ.வி., கதிர்வீச்சு குறியீட்டு எண் 11 என்ற அளவிலும், இடுக்கியிலும் 12 என்ற அளவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும்.

அதேபோல, யூ.வி.,கதிர்வீச்சின் தாக்கம் 8 முதல் 10 வரை என்ற அளவில் இருக்கும் கொல்லம், கோட்டயம், பாலக்காடு மலப்புறம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தரபும், அலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.






எப்படி தற்காத்து கொள்வது







இந்த சமயங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்


உங்களுக்கு தாகம் எடுக்காவிட்டாலும் சீரான இடைவெளியில் சுகாதாரமான தண்ணீரை குடிக்க வேண்டும்


மது, காபி மற்றும் டீ ஆகியவற்றை பகல் நேரத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்


பழங்கள், காய்கறிளை அதிகமாக சாப்பிட வேண்டும்


இறுக்கமான ஆடையை அணியக் கூடாது; பருத்து ஆடைகளை அணிய வேண்டும்


வீட்டை விட்டு வெளியேறும் போது காலணி அணிய வேண்டும். குடை அல்லது தொப்பி ஆகியவற்றை அணிந்து வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்

Advertisement