பயங்கரவாதம், பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடுவோம்: பிரதமர் மோடி

4

புதுடில்லி: 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமராக பதவியேற்ற பின், முதன்முறையாக, ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 17) டில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகிய இருவரும் சந்தித்து பேச்சு நடத்தினர்.


இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர். இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பிரதமர் மோடி, நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவிற்கு வந்த நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை வரவேற்கிறேன். பிரதமர் லக்சன் நீண்ட காலமாக இந்தியாவுடன் தொடர்புடையவர். எங்கள் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம்.
பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்.


வளர்ச்சியின் கொள்கையை நாங்கள் நம்புகிறோம். 2026ம் ஆண்டில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு உறவின் 100 ஆண்டுகளைக் கொண்டாடவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். சட்டவிரோத இடம்பெயர்வு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது: இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவோம். பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும், நானும் விவாதம் நடத்தினோம், என்றார்.

Advertisement