தமிழகத்தில் 59 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள்: ஆய்வில் அம்பலமான முக்கிய தகவல்

12

சென்னை: 'தமிழகத்தில் 59 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. நாட்டிலே அதிகபட்சமாக ஆந்திராவில் 79 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.



நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,123 எம்.எல்.ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், நாடு முழுவதும் 45 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 28 மாநிலங்களில் உள்ள 4,123 எம்.எல்.ஏ.,க்களில் 45 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.


29 சதவீதம் பேர், அதாவது 1,205 எம்எல்ஏக்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் (79%) 138 எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் தெலுங்கானாவில் தலா 69 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.


பீஹாரில் 66%, மஹாராஷ்டிராவில் 65% எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் 59% எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கட்சி வாரியாக விபரம் வருமாறு:

* பா.ஜ.,வின் 1,653 எம்.எல்.ஏ.,க்களில், 39 சதவீதம் பேர், அதாவது 638 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 436 பேர்
(26 சதவீதம்) கடுமையான குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.


* காங்கிரஸ் கட்சியின் 646 எம்.எல்.ஏ., க்களில், 339 பேர் (52 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 194 பேர் (30 சதவீதம்) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


* தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) 134 எம்.எல்.ஏ., க்களில், 115 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 82 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


* மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் 230 எம்.எல்.ஏ., க்களில், 95 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 78 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.


* ஆம் ஆத்மி கட்சியின் 123 எம்.எல்.ஏ., க்களில், 69 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 35 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


* சமாஜ்வாதி கட்சியின் 110 எம்.எல்.ஏ., க்களில், 68 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 48 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.


* தமிழகத்தை ஆளும் தி.மு.க., வின் 74 சதவீத (132 இல் 98) எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 42 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement