பதவியை காலி செய்தது வாய்ச்சவடால்; தர்மபுரி தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிப்பு!

11


தர்மபுரி: தர்மபுரி கிழக்கு தி.மு.க., மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய மாவட்ட செயலாளராக எம்.பி., மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல் நிலவி வருவது, ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் வரை அனைவரும் அறிந்த உண்மை. மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணி, தனக்கென ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வந்ததாக தலைமை கருதியது.
கட்சியில், நான்கு வெவ்வேறு கோஷ்டிகள் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு அரசியல் செய்ததால், அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிக்கு பின்னடைவு வரும் நிலை ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, தடங்கம் சுப்பிரமணியை, பிப்.,22ம் தேதி கட்சி தலைமை மாற்றியது. அவருக்கு பதிலாக, பென்னாகரம் தர்மசெல்வன், புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.


அவராவது கட்சியை சரியாக வழிநடத்துவார் என்று எண்ணி, தலைமை அவரை நியமனம் செய்திருந்தது. ஆனால், அவர் கட்சியினர் மத்தியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, தலைமைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் இங்கே இருக்க முடியாது என்கிற மிரட்டல் தோரணையில் அவரது பேச்சு இருந்தது.


இதை, அவருக்கு ஆகாத கட்சி நிர்வாகிகள், பதிவு செய்து வெளியிட்டனர். இது, ஆளும் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பிப்.,23ம் தேதி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன் இன்று அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

புதிய மாவட்ட பொறுப்பாளராக, தர்மபுரி தொகுதி எம்.பி., மணியை நியமித்து, கட்சி பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement