இந்தியாவில் ரயில்வே கட்டணம் குறைவுதான்: அண்டை நாடுகளை ஒப்பிட்டு லோக்சபாவில் அஸ்வினி வைஷ்ணவ் பட்டியல்!

20

புதுடில்லி: "அண்டை நாடுகளுடன் ஒப்பீடுகையில் இந்தியாவில் ரயில்வே கட்டணம் குறைவு தான். 350 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு இந்தியாவில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே தூர பயணத்திற்கு பாகிஸ்தானில் 436 ரூபாயும், இலங்கையில் 413 ரூபாயும், வங்கதேசத்தில் 323 ரூபாயும் ரயில் கட்டணமாக உள்ளது" என லோக்சபாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


2025-26 ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி அதிக அளவில் கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தை விட தற்போது 90 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. லாலு பிரசாத் காலத்தில் ஒரே ஆண்டில் 234 ரயில் விபத்துகள், 464 முறை ரயில்கள் தடம்புரண்டன. ஆண்டுக்கு 700 விபத்துகள் ஏற்பட்டன. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 395 விபத்துகள் ஏற்பட்டன.


மல்லிகார்ஜுன கார்கே ரயில்வே அமைச்சராக இருந்த போது ஆண்டுக்கு 381 விபத்துகள் ஏற்பட்டன. புதிய தொழில்நுட்பம், முதலீடுகளை ரயில்வே துறைக்கு, பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஆண்டுக்கு விபத்துகள் 30 ஆக குறைந்துள்ளது. ரயில் தடம்புரளும் சம்பவம் 43 ஆக குறைந்துள்ளது. 2020ம் ஆண்டு முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

ரயில் கட்டணம்

அண்டை நாடுகளுடன் ஒப்பீடுகையில் இந்தியாவில் ரயில்வே கட்டணம் குறைவு தான். 350 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு இந்தியாவில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே தூர பயணத்திற்கு பாகிஸ்தானில் 436 ரூபாயும், இலங்கையில் 413 ரூபாயும், வங்கதேசத்தில் 323 ரூபாயும் ரயில் கட்டணமாக உள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகளில் ரயில் கட்டணம் 5 மடங்கு உயர்வு.

சிறப்பு ரயில்கள்

கடந்த ஆண்டு, ஹோலி பண்டிகை காலத்தில், நாங்கள் 604 சிறப்பு ரயில்களையும், கடந்த கோடைகாலத்தில் 13,000 சிறப்பு ரயில்களையும், தீபாவளி மற்றும் சத் பண்டிகையின் போது 8,000 ரயில்களையும் இயக்கினோம். கும்பமேளாவின் போது, ​​ 17,330 சிறப்பு ரயில்களும், ஹோலி பண்டிகை காலத்தில் 1,160 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
10,000 இன்ஜின்கள், 15,000 கி.மீ. தூரத்திற்கு, விபத்தை தடுக்க 'கவாச்' கருவிகள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement