உயர் மின் அழுத்தத்தால் மின் சாதனங்கள் நாசம்

மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு குழாய் பதிப்பு பணிக்காக பள்ளம் தோண்டியபோது, பிரதான மின் கேபிள் சேதமடைந்தது. இதையடுத்து, இரவு 10:00 முதல், இரண்டு முறை மின் தடை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், சேதமடைந்த மின் கேபிள்களை சரி செய்ய நீண்ட நேரம் ஆனதால், 45 நிமிடங்கள் மின் வினியோகம் இல்லாமல், குழந்தைகள், முதியோர் துாக்கமின்றி மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, மும்முனை இணைப்பில், ஒரு முனை இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

நள்ளிரவு மும்முனை இணைப்பு வழங்கியபோது, உயர் மின் அழுத்தம் காரணமாக, பல வீடுகளில் இருந்த பிரிஜ், டிவி, டிஸ்பென்சர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின.

Advertisement