அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: இருவர் கைது

5

சென்னை: சென்னை, புளியந்தோப்பை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 55 உட்பட, 14 பேர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார்:


அதில், இந்து சமய அறநிலையத்துறை, மின்வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, மயிலாப்பூரைச் சேர்ந்த, டில்லி குமார், கொளத்துாரைச் சேர்ந்த மகேஷ், 34 ஆகிய இருவரும், பல லட்சம் பெற்று, மோசடி செய்துள்ளனர்.

எனவே, இருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.



இதில், டில்லிகுமார், மகேஷ் ஆகிய இருவரும், 14 பேரிடம் இருந்து, 62.8 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது. உதவி கமிஷனர் சுரேந்திரன், ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று, மோசடியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.

தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 72 லட்சம் மோசடி



Latest Tamil News சென்னை போரூர், தெள்ளியகரம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் திருநங்கை ப்ரீத்தி, 39. அவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் சத்யா வாயிலாக, ஷீலாதேவி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

ஷீலாதேவி, 'ஸ்ரீ கனக மகாலட்சுமி கோல்டு லோன்' என்ற நிதி நிறுவனத்தில், தீபாவளி சேமிப்பு சீட்டு நடத்தி வருவதாக, ப்ரீத்தியிடம் கூறியுள்ளார். அதன்படி, பூந்தமல்லி, சன்னதி தெருவில் இயங்கி வரும் நிறுவன உரிமையாளர்கள் முல்லகிரி ஆனந்த் குமார், அவரது மகன் ப்ரித்வி கிருஷ்ணா, அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர், மேற்கூறிய தீபாவளி சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தால், நல்ல லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அதை உண்மை என நம்பிய ப்ரீத்தி, தன் அக்கா தீபா பெயரில், 11 சீட்டு; தனக்கு தெரிந்தவர்களிடம் ஏழு சீட்டு என, 18 தீபாவளி சீட்டு கட்டி வந்துள்ளார். இதற்காக, 2023 அக்., முதல் 2024 செப்., வரை, 'ஜிபே' வாயிலாக, 2.16 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார். அதற்கு போனசாக, 54,000 ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி உரிமையாளர்கள் மூவரும் தலைமறைவாகினர்.

இவரை போல் 36 பேரிடம், 600 தீபாவளி சீட்டு பிடித்து, 72 லட்சம் ரூபாயை பெற்று ஏமாற்றியது தெரிந்தது. இதுகுறித்து, ப்ரீத்தி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில், ஜனவரியில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான தனிப்படை போலீசார், கொளப்பாக்கம், பி.டி.நகரில் தலைமறைவாக இருந்த முல்லகிரி ஆனந்த்குமார், 56, முல்லகிரி ப்ரித்வி கிருஷ்ணா, 26 ஆகிய இருவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தலைமறைவாக உள்ள தேவி ஸ்ரீயை தேடி வருகின்றனர். இதுதவிர, விருகம்பாக்கம், கே.கே நகரில், நிறுவன கிளைகளை ஆரம்பித்து, 3.50 கோடி மதிப்பிலான தங்க நகை மற்றும் 2 கோடி ரூபாய் கடன் என, 5.50 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement