தலைவர் பதவிக்கான ஆசையில் ஊராட்சி இணைப்பை தடுக்கின்றனர்; 'போட்டுடைத்தார்' அமைச்சர் நேரு

4

சென்னை: ''நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர, முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.ய

சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


பா.ம.க., - வெங்கடேஸ்வரன்: சில ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைப்பதாக பட்டியல் வெளியாகி உள்ளது. மக்கள் வேண்டாம் என்கின்றனர். மக்கள் கருத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: நுாறு நாள் வேலை திட்டம் கிடைக்காது என்பதால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் இணைக்க, ஊராட்சிகளில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒருத்தர் வேண்டும் என்கிறார்; ஒருத்தர் வேண்டாம் என்கிறார். தற்போது 375 ஊராட்சிகளை இணைத்துள்ளோம்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், கலெக்டர் தலைமையிலான குழு பரிசீலிக்கும். இணைக்கப்பட்ட ஊராட்சிகளில், 100 நாள் வேலை திட்டத்தை அனுமதிக்க வேண்டும் என, முதல்வரிடம் கூறியுள்ளோம்.


அப்படி வந்தால், எந்த பாதிப்பும் இல்லாமல், நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஊரோடு, அந்த ஊரைச் சேர்த்தால், நாம் தலைவராக முடியாது என, சிலர் ஆட்களை துாண்டிவிடுகின்றனர். அது மாதிரி இருந்தால், கடைசி வரைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

காங்., - அசன் மவுலானா: சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட தரமணி பகுதியில், ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. அமைச்சர் நேரு: உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement