தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது

சென்னை: ''ஆசை காதலிக்காக, கிழக்கு கடற்கரை சாலையில், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாமல் இடையூறாக இருந்த, தி.மு.க., முன்னாள் எம்.பி.,யின் உதவியாளரை காரில் கடத்தி, கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்து குழி தோண்டி புதைத்தேன்,'' என, கைதான பட்டதாரி வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வட சென்னை தொகுதி தி.மு.க., - எம்.பி.,யாக இருந்தவர் குப்புசாமி. இவர், 2013ல் இறந்து விட்டார். இவரிடம், சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார், 71, என்பவர் உதவியாளராக இருந்தார்.
அதற்கு முன், சென்னை மாநகராட்சியில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக் காலத்தில், தி.மு.க., தொழிற்சங்கமான, தொ.மு.ச., உடன் இணைக்கப்பட்ட, தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தையும் நடத்தி வந்தார். அதன் பொதுச்செயலராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த, 16ம் தேதி, சென்னை சேலையூரில் உள்ள மகள் வீட்டிற்கு, ஆட்டோவில் சென்றுள்ளார். அங்கிருந்து அதே ஆட்டோவிலும் வீடு திரும்பி உள்ளார். தாம்பரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது.
அப்போது, ஆட்டோ ஓட்டுநரிடம், 'திருப்போரூர் வரை செல்ல வேண்டி இருப்பதால், இங்கேயே இறங்கி விடுகிறேன். அங்கு ரவி என்பவரை பார்த்து விட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன்' என, கூறியுள்ளார்.
இதையே பஸ் நிலையம் அருகே உள்ள, உணவக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகள் வீட்டிற்கும் செல்லவில்லை; போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குமாரின் மகள், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காரில் கடத்தல்
உதவி கமிஷனர் நெல்சன் தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அவரின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கடைசியாக, வண்டலுார் அருகே, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த நில புரோக்கர் ரவி என்பவருடன் பேசியது தெரியவந்தது.
ஆட்டோ ஓட்டுநர் இன்பசேகரன் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அவரும், தன்னிடம் ரவி என்பவரை சந்திக்கச் செல்வதாக குமார் கூறியதை, போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் ரவியின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு, அவரை வரவழைத்து விசாரித்தபோது, தனக்கு எதுவுமே தெரியாது என, சாதித்தார்.
அவரை அனுப்பிவிட்டு, அவரை போலீசார் கண்காணித்தனர். பதற்றத்தில், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு, கூட்டாளிகளான அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த விஜய், 38, செந்தில், 38, ஆகியோரை சந்திக்கச் சென்றார்.
போலீசார் மூவரையும் சுற்றி வளைத்து, 'கிடுக்கி' போட்டதில், குமாரை காரில் கடத்தி, சித்ரவதை செய்து, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, குழிதோண்டி புதைத்ததாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரிடம் ரவி அளித்துள்ள வாக்குமூலம்:
நான் இளங்கலை பட்டதாரி. தாம்பரம், சேலையூர், கானத்துார், உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில், காலி மனைகள், விற்பனைக்கு உள்ள வீடுகளை நோட்டமிட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து, நில அபகரிப்பில் ஈடுபடுவது தான் எனக்கு பிரதான தொழில்.
காலி மனை குறித்து தேடுதலில் ஈடுபட்டபோது, கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி கபிலன் தெருவில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிரவுண்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை, மகாலட்சுமி என்பவர், 1987ல் வாங்கி உள்ளார்.
ஆசை காதலிக்காக...
குடும்பத்துடன், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு குடிபெயர்ந்த மகாலட்சுமி, 2010ல் இறந்து விட்டார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருப்பது தெரியவந்தது. அந்த நிலத்தின் மீது, என் காதலி தனலட்சுமி ஆசைப்பட்டார்.
அவருக்காக நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தேன். அதற்காக, மகாலட்சுமியின் மகள் தான் தனலட்சுமி என, போலி வாரிசு சான்றிதழ் தயார் செய்தேன். மகாலட்சுமி தன் மகள் தனலட்சுமிக்கு, அந்த நிலத்தை, 'செட்டில்மென்ட்' செய்ததுபோல ஆவணங்கள் தயார் செய்து, பத்திரப்பதிவு செய்தேன்.
நிலத்தில் சுற்றுச்சுவர் அமைத்து, அங்கு, 'சிசிடிவி கேமரா' பொருத்தினேன். அந்த இடத்தில், காதலிக்கு சொகுசு வீடு கட்டி உல்லாசமாக வாழும் கனவிலும் மிதந்தேன்.
வில்லன் போல வந்தார்
மகாலட்சுமியின் உறவினர் தான் குமார். நான் உத்தண்டி நிலத்தில் சுற்றுச்சுவர் அமைத்து இருக்கும் தகவல் மும்பையில் உள்ள ரமேஷுக்கு தெரியவந்துள்ளது; அவர் குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குமார் உத்தண்டிக்கு வந்து, என்னிடம் வாக்குவாதம் செய்தார். 'நிலம் என்னுடையது, நீ யார், உன் மீது போலீசில் புகார் அளிப்பேன்' என, மிரட்டினேன்.
அவர் முந்திக் கொண்டு, என் மீது கானத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரிடமும் உள்ள, ஆவணங்களை எடுத்து வருமாறு கூறினார்.
சரிபார்த்த பின், என்னிடம் உள்ள ஆவணங்கள் போலி என்பதை கண்டறிந்தனர். என் நிலம் அபகரிப்பு ஆசைக்கு குமார் வில்லனாக வந்தார்.
நிலத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என, குமாரிடம் பேசி பார்த்தேன்.
'நான் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டேன். நீங்கள் என்னிடம் இருந்து நிலத்தை அபகரிக்க பார்க்கிறீர்கள். உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். நிலத்தை விற்று பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம்' என கேட்டுப் பார்த்தேன். எதற்கும் அவர் அசரவில்லை.
மிரட்டியும் பார்த்தேன்; மசியவில்லை. என் தலையில் மண்ணை வாரி போடும் குமாரை, மண்ணுக்குள் புதைக்க முடிவு செய்தேன். சேலையூருக்கு வந்திருந்த குமாரை தொடர்பு கொண்டு, தையூர் அருகே நிலம் ஒன்றை பேசி முடிக்க வேண்டி உள்ளது என்றும், அதற்கு குமாரின் உதவி தேவைப்படுவதாகவும் கூறி, தாம்பரம் பஸ் நிலையம் அருகே வரவழைத்தேன்.
அங்கு நானும், என் கூட்டாளிகள் செந்தில், விஜய் ஆகியோரும், 'மகேந்திரா தார்' காரில், குமாரை கடத்தினோம். நல்லவர்கள் போல நடித்து, உத்தண்டி நிலம் தொடர்பாக பேசினோம்; அவர் விடாப்பிடியாக பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பகுதி ஏரிக்கு அழைத்துச் சென்று, கட்டப்பஞ்சாயத்து செய்தோம். அந்த நிலத்தின் அசல் ஆவணங்களை கொடுத்து விடுமாறு, கெஞ்சியும் பார்த்தோம்; தர மறுத்து விட்டார்.
கொன்றோம்
மீண்டும் அவரை காரில் ஏற்றினோம். அதன்பின், அவரின் வாயை பொத்தி, காலால் மிதித்து சித்ரவதை செய்தோம். அப்படியும் ஆவணங்களை தர முடியாது என கூறினார். இதனால், மறைத்து வைத்திருந்த கயிறால் அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.
அவரின் உடலை, என் சொந்த ஊரான, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, தொண்டூர் பகுதியில் கன்னிமாரியம்மன் கோவில் அருகே, காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று குழி தோண்டி புதைத்தோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரவி உள்ளிட்ட மூவரையும், குமாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நான்கு பேரை தேடி வருகின்றனர்.






மேலும்
-
மத்திய அமைச்சரின் உறவினர் சுட்டுக்கொலை; பீஹாரில் அதிர்ச்சி
-
வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கிறார்: முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு
-
எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 22 பேர் சுட்டுக்கொலை!
-
மதுக்கடையை மூட வலியுறுத்தி த.வெ.க., ஆர்ப்பாட்டம்
-
தெருநாயால் உயிரிழக்கும் கால்நடைகள்; பா.ஜ., கோரிக்கை