மத்திய அமைச்சரின் உறவினர் சுட்டுக்கொலை; பீஹாரில் அதிர்ச்சி

3

பாட்னா: பீஹாரில் தண்ணீர் பிரச்னையில் மத்திய அமைச்சரின் உறவினர், அவரது சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பீஹார் மாநிலம், பஹால்பூர் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் மருமகன் குடும்பத்தில் தண்ணீர் குழாய் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஸ்வஜித், ஜெய்ஜித் ஆகிய இரு அண்ணன், தம்பி இடையே எழுந்த இந்த மோதல், கைகலப்பாக மாறியது. இதில், ஜெய்ஜித் துப்பாக்கியால் சுட்டதில் விஸ்வஜித் சம்பவ இடத்திலேயே இறந்தார்.


ஜெய் ஜித் ஆபத்தான நிலையில் பாகல்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரின் மருமகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து எஸ்.பி., பிரோணா குமார் கூறியதாவது: இன்று காலை 7.30 மணியளவில் ஜகத்பூர் கிராமத்தில் இரண்டு சகோதரர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தில், ஒரு சகோதரர் காயமடைந்தார், ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். இறந்தவரின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.



அந்த இரண்டு பேரும் விஸ்வஜீத் மற்றும் ஜெய்ஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இருவரும் மத்திய அமைச்சரின் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement