ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்

7

சென்னை: ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை மெரினாவில், 2017ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பார்வையிழந்த நபருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி ரோட்டரி நகரைச் சேர்ந்த விமலா என்பவர் தாக்கல் செய்த மனு: ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை மெரினா கடற்கரையில், 2017ம் ஆண்டு ஜன., 17 முதல் 23ம் தேதி வரை, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. ஜன., 23 மாலை, நானும், மகன் கார்த்திக், வீட்டினுள் அமர்ந்திருந்தோம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, ஏற்கனவே மகனுக்கு அறிவுறுத்தி இருந்தேன். அதன்படி அவரும் பங்கேற்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையில் ஏற்பட்ட சத்தம் கேட்டு, வீட்டைப் பூட்டினோம். திடீரென உள்ளே நுழைந்த போலீசார், எங்களை வெளியே இழுத்து போட்டனர்.

மகன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். போலீசார் தாக்கியதில், மகனின் இடது கண் பார்வை பறிபோனது. எனவே, உரிய மருத்துவ சிகிச்சை கோரிய என் மனுவை பரிசீலிக்குமாறு, கடந்த 2022ம் ஆண்டில் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அந்த உத்தரவு புறக்கணிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான இறுதி விசாரணை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று வந்தது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த, காவல் துறை தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், ''போராட்டக்காரர்கள் வீசிய கற்களால் தான், மனுதாரரின் மகனுக்கு கண்பார்வை பறிபோனது,'' என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இடது கண் பார்வை பறிபோன இளைஞருக்கு, தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Advertisement