மும்பையில் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.20 கோடி இழந்த மூதாட்டி

3

மும்பை: மும்பையில் 86 வயது மூதாட்டி ஒருவரிடம், சைபர் மோசடி கும்பல், 'டிஜிட்டல் அரெஸ்ட்' என மிரட்டி, ரூ.20 கோடியை பறித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ., அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி மொபைல்போன் மூலம் மூலம் பலரை தொடர்பு கொள்ளும் சைபர் மோசடி கும்பல் அவர்களை 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனக்கூறி மிரட்டுகின்றனர். பிறகு அவர்களின் வங்கிக்கணக்கை பெற்று பணத்தை சுருட்டி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் மோசடி குறைந்தபாடில்லை.


இந்நிலையில் மஹாராஷ்டிர தலைநகர் மும்பை தெற்கு பகுதியில் வசித்து வரும் 86 வயது மூதாட்டியை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உள்ளார். அதில், கடந்த ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேலும் உங்களின் மகன் மகளை கைது செய்யப்போவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். பிறகு, அவரது அறையிலேயே இருக்க வேண்டும் என மிரட்டி உள்ளார்.


தொடர்ந்து மர்ம நபர், மூதாட்டியின் ஆதார் எண்ணை பெற்று புதிதாக வங்கிக்கணக்கு துவக்கி அதில் பணத்தை போடும்படி கூறியுள்ளார். அதன்படி மூதாட்டியும், மோசடி நபர்கள் கூறியபோது எல்லாம் பணத்தை அதில் மாற்றி உள்ளார். அந்த வகையில் ரூ.20.26 கோடி வரை அந்த வங்கிக்கணக்கில் மூதாட்டி பணத்தை போட்டு உள்ளார். அந்த பணத்தை மோசடி நபர்கள் வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.


வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்ணுக்கு சந்தேகம் ஏற்படவே, மூதாட்டியை கண்காணித்து உள்ளார். அவர் உணவுக்காக மட்டும் அறையை விட்டு வெளியில் வருவதும், அறையில் மொபைல்போனில் ஆக்ரோஷமாக பேசுவதும் தெரிந்தது. இதனையடுத்து அவரது மகளுக்கு, பணிப்பெண் தகவல் தெரிவித்தார். இதனடிப்படையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷயான் ஜமீல் சேக்(20), ரசிக் அசன் பட்(20) மற்றும் ஹர்திக் சேகர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.77 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் வெளிநாட்டு கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

Advertisement