100 நாள் வேலை சம்பளம் கேட்டு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

அரியாங்குப்பம் : நுாறு நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி, பி.டி.ஓ., அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம், மணவெளி பகுதி நுாறு நாள் வேலை தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 11:00 மணியளவில், அரியாங்குப்பம் பி.டி.ஓ., அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், வேலை செய்த ஒரு மாதத்திற்கான சம்பளம் வழங்க வில்லை. நுாறு நாட்கள் வேலை எனக்கூறி இந்த ஆண்டில், 70 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டிலாவது நுாறு நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அப்போது, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, பி.டி.ஓ., கார்த்திகேசன், வேலை செய்தவர்களுக்கு சம்பளத்திற்கான பில் அனுப்பப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து வருவதற்கு காலதாமதம் ஆகியுள்ளது.

விரைவில், சம்பளம் வந்து விடும். அடுத்த ஆண்டிற்கான நுாறு நாட்கள் வேலை, வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவு செய்யப்படும் எனக்கூறினார்.

இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement