ஆண்டுக்கு 66 ஆயிரம் டன் விதை நெல் உற்பத்தி' தமிழகம் முழுவதும் வினியோகம்

உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில், அதிக மகசூல், நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட நெல் ரக விதைகள் ஆண்டுக்கு, 66 ஆயிரம் டன் உற்பத்தி செய்து, தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் பவானி பாசன பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அதிக மகசூல் தரும் நெல் ரகங்களான, ஏ.டி.டி.,-45, 46,39, 38, 37, சாவித்திரி சி.சி.,1009, ஐ.ஆர்.,20, டி.வி.எஸ்.,5, ஏ.எஸ்.டி.,1, சி.ஓ.,50, சி.ஓ.,51 ஆகிய ரகங்களில் விதைப்பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படிநிலையிலும், விதைச்சான்றுத்துறையால் ஆய்வு செய்யப்பட்டு, தரமான சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், 69 அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு, ஆண்டுக்கு, 66 ஆயிரம் டன் விதை நெல் உற்பத்தி செய்து, தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது:

விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற, அதிக மகசூல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. விதைப்பண்ணை பதிவு முதல், சான்றட்டை பொருத்தி வினியோகம் வரை விதைச்சான்றுத்துறை கண்காணிக்கிறது. அறுவடை செய்யப்பட்ட விதை குவியல்கள், ஆய்வு செய்யப்பட்டு, பிற ரக கலவன்கள், ஈரப்பதம், ஆய்வு செய்யப்படுகிறது. மூட்டைகளில், வயல் மட்ட விதை குவியல்களில் விபரம், விதைச்சான்று எண், ரகம் , அளவு, எண்ணிக்கை போன்ற விபர அட்டை பொருத்தப்பட்டு, ஈய வில்லையால் முத்திரையிடப்படும்.

அவற்றுக்கு சுத்தி அறிக்கை வழங்கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்தி நிலையங்களில் சுத்தி பணிக்கு அனுமதிக்கப்படுகிறது.

சுத்தி செய்யப்பட்ட விதை குவியல்களில் மாதிரி சேகரிக்கப்பட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற விதைப்பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி, அதிக வருவாய் பெறலாம். விதைப்பண்ணைகள் அமைத்து, தரமான விதை உற்பத்தி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.

இவ்வாறு, மணிகண்டன் தெரிவித்தார்.

Advertisement