அமெரிக்க கல்வி துறையை மூட டிரம்ப் முடிவு; மாகாணங்களுக்கு பொறுப்பை வழங்க திட்டம்

23


வாஷிங்டன் : அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், அமெரிக்க கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவை, அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்க அதிபராக, கடந்த ஜன., 20ல் பதவியேற்றார் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப். இரண்டு மாதங்களாக, தினமும் ஏதாவது ஒரு புது புது உத்தரவுகள், அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.


அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதால், கல்வித் துறையை மூடப் போவதாக அவர் கூறியிருந்தார். பழமைவாதிகளான குடியரசு கட்சியின் கொள்கையும் இதுவாகும்.

அமெரிக்காவில், 1979ல் பார்லிமென்ட் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது கல்வித் துறை. கல்விக் கொள்கையை உருவாக்குவதுடன், நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மானியம் வழங்குவது உள்ளிட்ட வற்றை இந்தத் துறை கவனித்து வருகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி, தன் தாராளமயமாக்கல் கொள்கையை, கல்வித் துறை வாயிலாக நாடு முழுதும் திணிப்பதாக, குடியரசு கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக மதவாத, பயங்கரவாத, கம்யூனிச கொள்கைகள் புகுத்தப்படுவதாக, டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கல்வித் துறையை முழுதுமாக மூடுவதற்கு உத்தரவிட டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில், மாகாணங்களுக்கே கல்வியை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்படும் என, அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.அரசின் செலவுகள் குறைப்பது என்பதைவிட, இதில் அரசியல் காரணமே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு பல மாகாணங்கள், பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கு ஆதரவாக உள்ளன.


ஆனால், மத்தியில் ஆட்சியில் ஜனநாயகக் கட்சி இருந்தாால், அதன் கொள்கைகளையே குடியரசு கட்சி ஆதரவு உள்ள மாகாணங்களிலும் பின்பற்ற வேண்டும். இதனாலேயே, பழமைவாத கொள்கை உடைய குடியரசு கட்சி, கல்வியை மாகாணங்களின் கட்டுப்பாட்டுக்குள் விடுவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதன்படியே, கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவை டிரம்ப் பிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பார்லிமென்டில் ஒப்புதல் பெறாமல் இதை செயல்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

Advertisement