22 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரே ரஷ்ய அமைச்சர் இவர்தான்!

2

மாஸ்கோ: ரஷ்யாவில் எத்தனையோ அமைச்சர்கள் மாறினாலும், வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் மட்டும் மாறாமல் நிலைத்திருக்கிறார்.



ரஷ்யாவில் அதிபர் புடின் தலைமையில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியில் மாறாத விஷயங்கள் வெகு குறைவு. அமைச்சர்கள், பிரதமர்கள், துணை பிரதமர்கள், கட்சி நிர்வாகிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரும் மாறிவிட்டனர். அதிபராக இருந்த புடின் கூட ஒருமுறை பதவி விலகி இன்னொருவருக்கு அதிபர் பதவி கொடுத்தார்.


ஆனால் மாறாமல் இருக்கும் ஒரே நபர் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மட்டுமே. தொடர்ந்து 22 ஆண்டுகளாக லாவ்ரோவ் வெளியுறவு அமைச்சராக இருந்து வருகிறார். அவர் சந்திக்காத உலக நாடுகளின் தலைவர்களே இல்லை.


கடந்த 1972ம் ஆண்டு சர்வதேச உறவுகள் குறித்த தன் பட்டப்படிப்பை முடித்த லாவ்ரோவ், அப்போதைய சோவியத் யூனியன் சார்பில் இலங்கையில் தூதரகப் பணிக்கு நியமிக்கப்பட்டார். இதற்கு முக்கிய காரணம், அவர் கல்லூரியில் படிக்கும் போது, ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் கற்றுக் கொண்டார். கூடவே அவர் கற்றுக் கொண்டது சிங்கள மொழி. எனவே அவருக்கு இலங்கையில் தூதரக பணி கிடைத்தது.

தொடர்ந்து தூதரகப் பணியில் படிப்படியாக முன்னேறி வந்தார். சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா தனி நாடான நிலையில், ஐ.நா.,வுக்கான ரஷ்யாவின் நிரந்தர பிரதிநிதியாக 1994ல் நியமிக்கப்பட்டார். இந்தப் பணியில் மட்டும் அவர் பத்தாண்டுகள் தொடர்ந்து நீடித்தார்.அப்போதுதான் அவரது பேச்சுத்திறமையும் நகைச்சுவை உணர்வும் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரபலமானது.

அந்தப் பணியைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார் லாவ்ரோவ். கடந்த 22 ஆண்டுகளில் அவர் சென்று வந்த நாடுகளின் எண்ணிக்கை 150 ஆக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது சுற்றுப்பயணத்தை கணக்கிட்டால், இதுவரை 50 லட்சம் கிலோமீட்டர் சென்று இருப்பார்.
'எத்தனை நாடுகளுக்குச் சென்றாலும், ரஷ்யா தான் என்னை மிகவும் கவர்ந்த நாடு' என்கிறார் இன்று 75 வயதாகும் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்.

Advertisement