எல்லையில் 2,000 கேமராக்கள்... பாகிஸ்தானுக்கு செக் வைத்த பஞ்சாப் போலீஸ்

சண்டிகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ரூ.40 கோடி செலவில் 2,000 சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தும் பணியில் பஞ்சாப் போலீஸ் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து எல்லை கடந்த தீவிரவாதம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.40 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.
அதன்படி, இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் சுமார் 553 கி.மீ., தொலைவுக்கு 2,000க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தும் பணியை பஞ்சாப் போலீசார் மேற்கொண்டனர். தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறுகையில், இந்தியாவிலேயே 2வது நிலை பாதுகாப்பை கொண்ட மாநிலமாக பஞ்சாப் உள்ளது. எல்லையில் 702 இடங்களில் 2,127 சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி வருகிறோம்.
அதில், 100 பி.டி.இசட், கேமராக்களும், 243 ஏ.என்.பி.ஆர்., கேமராக்களும், 1,700 புல்லட் கேமராக்களும் அடங்கும். மத்திய அரசின் அனுமதியுடன், எல்லை தாண்டிய கடத்தலைத் தடுக்க ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.

