தி.மு.க., எம்.பி.,க்கள் இரட்டை வேடம்; வீடியோ வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

22


சென்னை: ''இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., எம்.பி.,க்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசியதாவது: மும்மொழியப்பட்ட குடியேற்ற மசோதாவானது, இந்தியாவில் வாழும் 90 ஆயிரம் இலங்கை வாழ் தமிழர்களை கணிசமாக பாதிக்கும். அதில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக, நம் நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

மறுவாழ்வு மையங்கள்



இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை 19,949 குடும்பங்கள், தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 103 மறுவாழ்வு மையங்களில் வாழ்கின்றனர். தமிழகத்தில் நாங்கள் அகதிகள் முகாம் என்று அழைப்பதில்லை, மாறாக தமிழக முதல்வர் அதற்கு மறுவாழ்வு மையங்கள் என்று பெயரிட்டுள்ளார். இந்த மசோதா, இலங்கை வாழ் தமிழர்களை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தங்களை பாதுகாத்துக்கொள்ள வந்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.




இதற்கு பதில் அளித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறினார். இத்தனை தமிழ் அகதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கான இந்திய அரசின் கொள்கை என்ன வென்று, அகதிகளை நினைத்த கவலை எனக்கும் இருக்கிறது. கனிமொழிக்கு இருப்பதை போலவே, அவர் கேட்டார் கொள்கை என்னவென்று, நான் கொள்கையை கூறுகிறேன்.

புல் ஸ்டாப், கமா



1986ம் ஆண்டு முதல் எந்த கொள்கை இருக்கிறதோ, நீங்கள் 10 ஆண்டுகள் யு.பி.ஏ., அரசில் இருந்த போது என்ன கொள்கை இருந்ததோ, அதுதான் எங்களின் கொள்கையும். தமிழ் அகதிகள் கொள்கையில் நாங்கள் புல் ஸ்டாப், கமா கூட மாற்றவில்லை. தி.மு.க., அங்கம் வகித்த அரசின் கொள்கையை தான் நாங்கள் அப்படியே பின்பற்றுகிறோம். மாற்றம் செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள் நாங்கள் ஆலோசிப்போம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இரட்டை வேடம்



இந்த வீடியோவை பதிவிட்டு அண்ணாமலை கூறியதாவது: காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்தபோது, தமிழகத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பல முறை தன்னைச் சந்தித்தபோதும் அது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தி.மு.க., எம்பிக்கள் இரட்டை வேடம் போடுவதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்லிமென்டில் வெளிச்சம் போட்டுக் காட்டினார். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement