அமேசான், பிளிப்கார்ட் கிடங்கில் 4,000 தரமற்ற பொருள் பறிமுதல்

3


புதுடில்லி: டில்லியில் உள்ள அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில், பி.ஐ.எஸ்., சோதனை நடத்தி, 4,000க்கும் மேற்பட்ட தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தது.


பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு, டில்லியில் உள்ள அமேசான் மற்றும் பிளிப்கார்ட் கிடங்குகளில் சமீபத்தில் விரிவான சோதனைகளை மேற்கொண்டது. இவற்றில், சரியான தரச் சான்றிதழ்கள் இல்லாத ஆயிரக்கணக்கான பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த 19ம் தேதி, மோகன் கூட்டுறவு தொழில் துறை பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிடங்கில், 15 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தரச்சான்று இல்லாத கெய்சர்கள், மிக்சிகள் உட்பட 3,500க்கும் மேற்பட்ட மின்னணு பொருட்களை, பி.ஐ.எஸ்., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'இன்ஸ்டாகார்ட்' நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், முறையான உற்பத்தி குறியீடு இல்லாத, விளையாட்டு வீரர்களுக்கான 590 ஜோடி காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதன் மதிப்பு 6 லட்சம் ரூபாய் என அதிகாரப்பூர்வ அறிக்கையில் பி.ஐ.எஸ்., தெரிவித்துள்ளது. இதற்கு முன் டில்லி, குருகிராம், பரீதாபாத், லக்னோ மற்றும் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement