தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள்: மஹாராஷ்டிரா முதலிடம்; கேரளாவுக்கு இரண்டாம் இடம்

2


புதுடில்லி: வெளிநாடுகளில் வேலை பார்த்து தாயகத்துக்கு பணம் அனுப்பும் இந்தியர்களில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், கேரளாவை சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவது பற்றிய புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த 2010- 11ம் நிதி ஆண்டில், தாய் நாட்டுக்கு இந்தியர்கள் அனுப்பிய பணத்தின் மதிப்பு 4.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்த நிதியானது, 2023-24ம் நிதி ஆண்டில் 9.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.



கடந்த 2020-21ம் நிதி ஆண்டில் இந்தியாவுக்கு வந்த மொத்த வெளிநாட்டு நிதியில், கேரள மாநிலத்தவர்களின் பங்கு 10.2 சதவீதமாக இருந்தது. கோவிட் தொற்று காரணமாக, வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் நிறைய பேர் தாய்நாடு திரும்பி வந்த நிலையில் பணவரவு குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் கேரள மாநிலத்தின் வெளிநாட்டுப் பல வரவு சதவீதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.


2023-24ம் நிதி ஆண்டில், தாய் நாட்டுக்கு பணம் அனுப்பிய கேரள மாநிலத்தவர்களின் பங்கு 19.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் இந்தியர்களில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தவர் உள்ளனர். மொத்த வெளிநாட்டு பணவரவில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பங்கு 20.5 சதவீதம் ஆகும்.


கேரளா 19.7 சதவீதம் பணவரவுடன் இரண்டாம் இடம், தமிழகம் 10.4 சதவீதம் பண வரவுடன் மூன்றாம் இடம், தெலுங்கானா 8.1 சதவீதத்துடன் நான்காம் இடம், கர்நாடகா 7.7 சதவீதம் பண வரவுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.


அதேபோல, எந்தெந்த நாடுகளில் இருந்து இப்படி வேலை பார்க்கும் இந்தியர்கள் பணம் அனுப்புகின்றனர், மொத்த பணவரவில் அது எத்தனை சதவீதம் என்ற விபரத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பணவரவில், 27.7 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 19.2 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும், 10.8 சதவீதம் பிரிட்டனில் இருந்தும் பண வரவு இருக்கிறது.

Advertisement