ஆர்வம், உழைப்பு இருந்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்
மதுரை: ஆர்வம், கடின உழைப்பு, தேடுதல் திறமை இருந்தால் எந்த துறை படிப்புகளிலும் உங்களால் (மாணவர்கள்) சாதிக்க முடியும். அனைத்து படிப்புகளும் வேலைவாய்ப்புள்ளவையே என கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வியை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கும் தினமலர் வழிகாட்டி இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் வேலை தரும் படிப்புகள் குறித்து அவர் பேசியதாவது:
பிளஸ் 2 முடித்தவுடன் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது பெற்றோரா, மாணவரா என ஒவ்வொரு குடும்பத்திலும் குழப்பம் இருக்கும். பெற்றோரும் மாணவரும் கலந்து பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்ற ஆர்வத்தை விட உங்களுக்கு (மாணவர்) எது வரும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பிளஸ் 2வில் 60 சதவீதம் மதிப்பெண்ணிற்கு மேல் பெறும் மாணவர்கள் பெரும்பாலும் பொறியியல் படிப்பை தேர்வு செய்கின்றனர். மருத்துவம், பொறியியல் 'எவர் கிரீன்' படிப்புகள். மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு வேண்டும். இதனால் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிப்பது இந்தியாவில் அதிகரிக்கிறது. அப்படி படித்து இங்கே வந்தாலும் இந்திய மெடிக்கல் கவுன்சிலிங் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் டாக்டராக முடியும். அதுபோன்ற தகுதி தேர்வில் 20 சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறுவதில்லை.
நீட் தேர்வில் ஜெயிக்க வேண்டும் என்றால் தெரியாத வினாக்களை எழுதக் கூடாது. பயாலஜியில் அதிக கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்றால் வெற்றி பெறலாம்.
மருத்துவம் கிடைக்காவிட்டால் இணை மருத்துவ படிப்புகள் ஏராளமாக உள்ளன. நர்சிங், பார்மஸி, பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, கிளினிக்கல் நியூட்டிரிஷன், ரேடியோ தெரபி, ஸ்பீச் தெரபி உட்பட 30க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. உணவு தொழில்நுட்பம், ஏற்றுமதியில் அதிக வருவாய் ஈட்டும் மீன்வளத்துறையில் பிஷரீஸ் சயின்ஸ், பிஷரீஸ் இன்ஜி., படிப்புகள் உள்ளன.
வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுப்பூச்சி வளர்ப்பு, உணவுத்துறை, வனத்துறை சார்ந்த படிப்புகளும் உள்ளன. பி.டெக்., எனர்ஜி அன்ட் என்வயர்மென்ட் உள்ளிட்ட படிப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் அப்ளிகேஷன், ஐ.டி., இ.சி.இ., 3இ, மெக்கானிக்கல், சிவில் ஆகிய படிப்புகளுக்கு அடுத்து ஆட்டோமொபைல், ஏரோ நாட்டிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ், பயோ டெக், அக்ரி இன்ஜி., ஏ.ஐ., டேட்டா சயின்ஸ், மிஷின் லேர்னிங், ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆடோமேஷன் உள்ளிட்ட துறைகளை தேர்வு செய்யலாம். ஓவியம் வரையும் திறன் இருந்தால் பைன்ஆர்ட்ஸ் படிப்புகள், டெக்ஸ்டைல் டிசைன்ஸ் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
இதுதவிர கலை அறிவியல் படிப்புகள் உள்ளன. பொறியியலில் உள்ள பல படிப்புகள் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கு வந்துவிட்டன. தமிழ், ஆங்கிலம் மொழிப் படிப்புகளுக்கு மீடியா துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆண்டிற்கு ரூ. 75 ஆயிரம் கோடி விளம்பர துறையில் செலவிடப்படுகிறது. விஷூவல் கம்யூனிகேஷன், அனிமேஷன் உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம்.
சைபர் செக்கியூரிட்டி துறை வேலைவாய்ப்பு குறையாது
சைபர் செக்கியூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் தினேஷ் பராந்தகன் பேசியதாவது:
நிறுவனங்களில் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக சைபர் செக்யூரிட்டி தேவை அதிகரித்துள்ளது. சைபர் செக்யூரிட்டி படித்தால் அப்டேட் ஆக இருக்க வேண்டும். இத்துறையில் ஹேக் செய்யும் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். சைபர் செக்யூரிட்டியில் 2 பிரதான பிரிவுகள் உள்ளன. ஒன்று ரெட் குழுவினர். இவர்கள் ஹேக் செய்பவர்கள். மற்றொன்று புளு குழுவினர். இவர்கள் ஹேக் செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்வர். படிக்கும் போதே நெட் ஒர்க்கிங், பைத்தான் போன்றவற்றில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெப்சைட் டெவலப்மென்ட் தொடர்பாக நெட் அகாடமி கோர்ஸ் உள்ளது.
கல்லுாரி பாடத்திட்டத்துடன் நெட் ஒர்க்கிங், பைத்தான். லினன்ஸ் ஆகியவற்றில் கூடுதல் அறிவு வேண்டும். புரோகிராமிங் தொடர்பாக பயிற்சி பெற லீ கோடு வெப்சைட் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஏராளமான கம்பெனிகளில் சைபர் செக்கியூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் முடித்தவர்கள் தேவை அதிகரித்துள்ளது. இத்துறைகளில் எப்போதும் வேலைவாய்ப்புகள் குறையாது. தனியார் நிறுவனங்களில் நெட் ஒர்க் செக்கியூரிட்டி அனாலிஸ்ட் பணிக்கு தற்போது ரூ.4 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மாணவர்கள் படிக்கும் போதே லிங்க்டன் ல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு உங்கள் விவரங்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்தால் நிறுவனங்களே உங்களை அழைக்கும். அரசு, தனியார் துறைகளில் சைபர் செக்கியூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் படித்தோர் தேவை அதிகரித்துள்ளது.
எந்த படிப்புக்கும் பணம் தடை இல்லை
வங்கி கடன் தொடர்பாக வங்கியாளர் விருத்தாசலம் பேசியதாவது:
நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு பணம் இல்லை என்பதால் படிப்பு தடை படக்கூடாது என்பதற்காக தான் கல்விக் கடன் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.இந்திய குடிமகன்கள் அனைவரும் கடன் பெற தகுதி பெற்றுள்ளனர். துறைசார்ந்த அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் பெறலாம். எனவே கல்வி கடன் பெற விரும்பினால் சம்பந்தப்பட்ட கல்லுாரியில் படிப்பில் சேர்க்கும்போது அந்த படிப்புகள் அங்கீகாரம் பெற்றவையா என்பதை பெற்றோர் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். கட்டணம் முழுவதும் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கே செலுத்தப்படும். மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ரூ. 75 லட்சம் வரையும், மருத்துவம் சாராத படிப்புக்கு ரூ. 50 லட்சம் வரையும் வங்கி கடன் பெறலாம். ரூ. 4 லட்சம் வரையான கடனுக்கு எவ்வித பங்களிப்பும் தேவையில்லை. ரூ. 4 லட்சத்திற்கு மேல் 5 சதவீத பணம் உங்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும். பெண்களுக்கு வட்டி வீதத்தில் அரை சதவீதம் குறைவு. படிப்பு முடித்து ஒரு ஆண்டுக்கு பின் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.இந்தாண்டு பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் பி.எம்.வித்யாலட்சுமி திட்டம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதற்குரிய ஆன்லைன் போர்ட்டலில் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்யலாம்.
திறன் மேம்பாடு எதிர்காலத்தை வளமாக்கும்
'21ம் நுாற்றாண்டில் திறன்கள்' குறித்து 'நாஸ்காம்' தேசிய தலைமை பொறுப்பாளர் உதய சங்கர் பேசியதாவது: எந்த விழிப்புணர்வையும் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். அதை மாணவர்கள் நலன் கருதி வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் தினமலர் சரியாக செய்து வருகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் படிப்பு என்பது அடையாளமாக இருக்க வேண்டும். பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். கல்லுாரியை தேர்வு செய்யும் போது அங்குள்ள வசதிகள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், கடந்தாண்டு மாணவர்கள் பெற்ற வேலை வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே அறிய வேண்டும்.பிளஸ் 2 முடிக்கும் 70 சதவீதம் பேர் உயர்கல்விக்கு பின் ஐ.டி., துறைக்கு தான் வரவுள்ளனர். கலை அறிவியல் படிப்போரும் இத்துறைக்கு தான் வருகின்றனர். எனவே படிக்கும் போது திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அதிகம் பெற வேண்டும்.
ஐ.டி., துறையில் அடுத்த 20 ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்போதுள்ள புதிய டெக்னாலஜியில் அப்டேட் ஆக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். ஐ.டி., துறைக்குள் வந்தால் 100 சதவீதம் டெக்னாலஜியில் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்க வேண்டும்.
வேலைக்காக படிப்பதை விட வாழ்க்கையில் சாதிப்பதற்காக படியுங்கள். திறமையா, நடத்தையா என்றால் உங்கள் நடத்தையை மேம்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது தான் நல்ல எண்ணங்கள் வளரும். ஒருபோதும் மாணவர்கள் இதை தான் படிக்க வேண்டும் என பெற்றோர் வற்புறுத்த வேண்டாம்.
மேலும்
-
பாலியல் துன்புறுத்தலை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியதென்ன?
-
வனப்பகுதியில் இரவு நேர 'டிரக்கிங்' சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
-
'மொபிலிட்டி' இன்ஜினியரிங்கில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது; மஹிந்திரா துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் பேச்சு
-
எழுவர் கால்பந்து போட்டிகள் எம்.எஸ்.பி., பள்ளி வெற்றி
-
பள்ளி ஆண்டு விழா திண்டுக்கல்
-
கிரிக்கெட்: பார்வதீஸ் வெற்றி