நேசித்தாலே கல்வி நேசிக்கும்
திண்டுக்கல் : '' கல்வியை நேசித்தால் கல்வி உங்களை நேசிக்கும் '' என கலெக்டர் சரவணன் பேசினார்.
நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒத்துழைப்புடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி வெகுதுாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் உண்டு, உறைவிட பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் பங்கேற்ற கலெக்டர் சரவணன் பேசியதாவது :
அரசு,அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பழநி வேலன் விகாஸ் பள்ளியில் உண்டு, உறைவிடப் பயிற்சி முகாமாக நாளை( மார்ச் 28) -முதல் ஏப். 30 வரை நடக்கிறது. இலவச பயிற்சியோடு புத்தகப்பொருட்கள், பல்வேறு வகையான வினா-விடைத்தாள் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. மாதிரித்தேர்வும் நடக்க உள்ளது. பொறுப்பு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவர் .
இந்த ஒருமாதம் கஷ்டப்பட்டு படித்தால் அதன் பலன் கிடைக்கும்போது வாழ்க்கையில் வெற்றி கிடைத்திடும்.
கல்வியை நேசித்தால் கல்வி உங்களை நேசிக்கும். உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றார்.