மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்புக்கு மறுப்பு: ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: மறுமணம் செய்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்த நீதிபதிக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் பெண் ஒருவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் 2020ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். பின்னர் அந்த அந்தப் பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறி இருவரும் மறுமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக திருமணம் செய்து கொள்ள அந்த ஆண் மறுத்துள்ளார். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவரும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. அவர்களிடம் மறுமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதற்கிடையே அந்தப் பெண் ஊழியர் கர்ப்பமானார். பின்னர் அந்தப் பெண் தான் பணிபுரியும் நீதிமன்றத்தில் மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் அந்த நீதிபதி அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்துவிட்டார். இதற்கு அந்த நீதிபதி பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். திருமணத்தை முறைப்படி பதிவு செய்யவில்லை. போலீசில் பதிவு செய்த எப்.ஐ.ஆர்.,யை திருமணத்துக்கான சான்றாக கருத முடியாது என நீதிபதி கூறியுள்ளார். . இது தொடர்பாக நீதிமன்ற பெண் அலுவலக உதவியாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது பெண் ஊழியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கணவரை இழந்த பெண் என்பதால் மறுமணத்தை கோவிலில் செய்தார். அதை பதிவு செய்யவில்லை. திருமண போட்டோகள் உள்ளது ' என தெரிவித்தார். பின்னர் வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுப்ரமணியன், ஜி அருள் முருகன் அமர்வு விடுப்பு வழங்காமல் இருந்ததை கண்டித்தது.
பின்னர், 'இது மனிதாபிமானமற்ற செயல். திருமணமான பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை என்பது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு பெற திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நிவாரணம்
பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்காமல் மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிவாரணத்தை அடுத்த 4 வாரங்களில் பெண் அலுவலக உதவியாளருக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.







மேலும்
-
காசநோய் கருத்தரங்கு
-
ஆர்வம், உழைப்பு இருந்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நகைகளை டிபாசிட் செய்ய கணக்கெடுக்கும் பணி தீவிரம்
-
சீருடைக்கு அளவு எடுத்த போது 'டச்' மாணவி புகாரில் போக்சோ வழக்கு
-
நேசித்தாலே கல்வி நேசிக்கும்
-
தமிழகத்தின் சித்த மருத்துவத்தை பிறமாநிலங்கள் கொண்டாடும் அபாயம்; சித்தமருத்துவ நுால்கள் ஆயுர்வேதமாக மடைமாற்றம்