800ல் ஒரு குழந்தைக்கு 'டவுன் சிண்ட்ரோம்'
ராயபுரம், உலக 'டவுன் சிண்ட்ரோம்' விழிப்புணர்வு தினம், ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது.
டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு நடன நிகழ்ச்சி, ஓவிய போட்டி, கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி முதல்வர் - பொறுப்பு - மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
குழந்தைகள் நல மருத்துவ துறை தலைவர் கணேஷ் கூறியதாவது:
சாதாரணமாக 23 ஜோடி குரோமோசோம்களுடன் தான் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால், டவுன் சிண்ட்ரோம் மரபணு நோய் குறைபாடு ஏற்படும் குழந்தைகளுக்கு 21வது குரோமோசோமில், இரண்டுக்கு பதிலாக மூன்று குரோமோசோம்கள் இருக்கின்றன.
இதனால் டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டோடு குழந்தைகள் பிறக்கின்றனர். சராசரியாக 800ல் ஒரு குழந்தைக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
டவுன் சிண்ட்ரோம் மரபணு நோயை, மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாது. 35 வயது மேல் திருமணம், நெருங்கிய உறவினர்களிடையே நடக்கும் திருணம் உள்ளிட்டவற்றால் இந்நோய் ஏற்பட முக்கிய காரணியாக அமைகிறது.
மூளை வளர்ச்சி இருக்காது. ஆனால் அக்குழந்தைகளுக்கு தகுந்த பயிற்சியும், பராமரிப்பும் அளிப்பதன் வாயிலாக, குழந்தைகளின் வாழ்வியலை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.