வேதனை தந்த வேதியியல்; 'களிப்பு' தந்த கணக்குப்பதிவியல்!

திருப்பூர்: 'வேதியியல் ஒரு மதிப்பெண்ணில், மூன்று கேள்விகள் பாடங்களுக்குள் இருந்து யோசித்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டதால், சிரமமாக இருந்தது; மற்ற பகுதிகள் எளிமையாக இருந்தது,' என, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவியர் தெரிவித்தனர்.

வேதியியல் கஷ்டம்



தீபிகா: ஒரு மதிப்பெண் வினாவில், மூன்று கேள்வி பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது. புரிந்து, யோசித்து எழுத வேண்டியிருந்தது. இரண்டு, மூன்று மதிப்பெண் பரவாயில்லை. கட்டாய வினா இதுவரை கேட்கப்படாத கேள்வி என்பதால், சற்று சிரமமாக இருந்தது. முழுமையாக விடையளித்துள்ளேன்; நல்ல மதிப்பெண் பெற முடியும்.

சம்யுக்தா: ஐந்து மதிப்பெண்ணில் ஒரு வினா மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மதிப்பெண், இதுவரை கேட்காத மூன்று கேள்விகள் வந்திருந்தது. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் முழுமையாக விடை எழுதினேன். கட்டாய வினா புதியதாக இருந்தாலும், புரிந்து கொண்டு விடையளிக்க கூடியதாக இருந்தது.

தேர்ச்சி சதவீதம் பாதிக்காது



திருப்பூர் மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியர் லோகநாதன் கூறுகையில், ''சென்டம் மதிப்பெண்ணுக்கு திட்டமிட்டு படித்த, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவருக்கு வினாத்தாள் எளிமையானது. ஒரு மதிப்பெண்ணில் மூன்று வினா சிந்தித்து விடை எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது; நிச்சயம் பதில் அளித்திருக்க முடியும். ஐந்து மதிப்பெண்ணில் ஒரு வினா மட்டும் முந்தைய வினாத்தாள்களில் இடம் பெறாதது; இதுவரை கேட்காதது. ஆனால், விடை எழுது கூடிய வகையில் தான் இருந்தது. வேதியியல் தேர்ச்சி சதவீதம் பாதிக்காது; சென்டம் வாய்ப்புள்ளது,' என்றார்.

கணக்குப்பதிவியியல் சுலபம்



தனிகா: கட்டாய வினாவில் எதிர்பார்த்த கேள்விகள் வந்திருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. பாடங்களுக்கு பின் இருந்த கேள்விகள் அப்படியே வந்திருந்ததால், பதட்டமில்லாமல், முழுமையாக பதில் எழுத முடிந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

அபிநயா: ஒரு மதிப்பெண் வினாவில் மூன்று கேள்வி மட்டும் பாடங்களுக்குள் இருந்து வந்திருந்தது. அவற்றையும் புரிந்து கொண்டு விடை எழுத முடிந்தது. இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள், கட்டாய வினாக்கள் எளிமையாக இருந்தது; கூடுதல் மதிப்பெண் பெற முடியும்.

'சென்டம்' வாய்ப்புண்டு



கே.எஸ்.சி., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவுசல்யா கூறுகையில், ''அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில், தேர்வு எளிமையாக இருந்தது. முந்தையஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் மூன்று பாடங்களுக்குள் இருந்து வந்தது என்றாலும், விடையளிக்க கூடியது தான். கணக்கு பதிவியலில் தேர்ச்சி சதவீதம் உயரும்; மாணவ, மாணவியர் சென்டம் பெறவும் வாய்ப்புகள் உள்ளது,'' என்றார்.

Advertisement