பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மூவர் தலைமறைவு


பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மூவர் தலைமறைவு


குமாரபாளையம்:ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் கவுசிக், 19; சேலம் சட்டக்கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, காகாபாளையத்தில் இருந்து, பவானி செல்லும் தனியார் பஸ்சில் சென்றுகொண்டிருந்தார்.
குமாரபாளையம்-ஆனங்கூர் பிரிவு பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, போதையில் டூவீலர் ஓட்டி வந்த மூன்று பேர், பஸ்சின் முன் பகுதியில் அங்கும், இங்குமாக ஓட்டி வந்தனர். இதனால் பஸ் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். அப்போது போதை ஆசாமிகள் மூவரும், பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் பஸ்சை நிறுத்தி, தகாத வார்த்தையில் பேசியுள்ளனர்.
இதை சட்டக்கல்லுாரி மாணவர் கவுசிக் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த மூவரும், கவுசிக்கை தாக்கியுள்ளனர். அப்போது, டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரும் தட்டிக்கேட்டுள்ளனர். அவர்களையும் தாக்கினர். இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement