வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்

சென்னை: ''வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும், தமிழக வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் தலை வணங்கியதில்லை,'' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கம் தென்னரசு பேசியதாவது: மத்திய அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, 19,068 கோடி ரூபாய் மட்டும் தான். ஆனால், உ.பி.,க்கு, 2025 - 26ல் மட்டும் ஒதுக்க உத்தேசித்துள்ள தொகை, 19,858 கோடி ரூபாய். அதாவது, தமிழகத்துக்கு மூன்று ஆண்டுகளில் கொடுக்கக்கூடிய தொகை, ஒரே ஆண்டில், உ.பி.,க்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்தாலும் கூட, இந்தியாவிலேயே மிக அதிகமான மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை, மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல், தன் சொந்த நிதி ஆதாரங்களை கொண்டு, தமிழகம் செயல்படுத்த ஆரம்பித்தது. பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் வற்புறுத்திய பின்தான், மத்திய அரசு தன் பங்கை வழங்கியது.
உலகெங்கும் பல நாடுகளும், 'செமி கண்டக்டர்' துறையில் போட்டி போட்டு செயலாற்றி வருகின்றன. எனவே, அந்த துறையில் தமிழகம் முன்னிலை பெற வேண்டுமென்ற நோக்கத்துடன், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து, செமி கண்டக்டர் திட்டம் ஒன்றை, ஐந்தாண்டு திட்டமாக அரசு அறிவித்துள்ளது. அதில், இரு செமி கண்டக்டர் தொழில் பூங்காக்கள், கோவை சூலுார், பல்லடத்தில் நிறுவப்பட உள்ளன.
தொழில் பூங்காக்கள்
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில், 14.17 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. தற்போது, 32.10 லட்சம் தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. நான்கு ஆண்டுகளில் மட்டும், 32 'சிப்காட்' தொழில் பூங்காக்கள், 16,880 ஏக்கரிலும், 28 'சிட்கோ' தொழிற்பேட்டைகள், 1,213 ஏக்கரிலும் உருவாக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் கனவு இல்லம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், விடியல் பயணம் என, பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்திய பின்பும், வருவாய் பற்றாக்குறையை, 68,000 கோடி ரூபாயில் இருந்து, 41,000 கோடி ரூபாயாக குறைத்திருக்கிறோம்.
நவீன குலக்கல்வி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வரும் வேளையில், தமிழகம் எல்லாருக்கும் எல்லாம் என்ற முழக்கத்தை முன்வைத்து, வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
பல நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சிகள் நடத்த, அரசு திட்டமிட்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளில், 93 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மறுக்கின்றனர்
கடும் மழையிலும், வெயிலிலும், 100 நாள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு உரிய நிதியை கொடுங்கள் என்று, மத்திய அரசிடம் கேட்கிறோம். இன்று வரை மறுக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்கான நிதியை தர மறுக்கின்றனர். 'நீட்டிய இடத்திலே கையெழுத்தைப் போட்டு, நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு போ' என்று சொல்லக்கூடிய அந்த வல்லாதிக்க மனோபாவம் காரணமாக, தமிழகம் இன்று வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
'அப்படி கையெழுத்து போட்டுவிட்டு போனால் தான், நாங்கள் உரிய நிதியை விடுவிப்போம் என்று சொன்னால், தன்மான உணர்வோடு, 2,000 கோடி ரூபாய் அல்ல, 10,000 கோடி ரூபாயை நாங்கள் இழந்தாலும், எங்கள் கொள்கையை இழக்க மாட்டோம்' என்று, முதல்வர் பிரகடனம் செய்துள்ளார்.
மண்ணின் குணம்
மக்கள் நலனுக்கு எதிராக, தலைநகரில் இருந்து எடுக்கப்படும், எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிரான குரல் கொடுப்பதற்கு, சென்னை மாகாணம் வழி வழியாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் பக்கத்தில்தான் என்றைக்கும் இருப்போம் என்பது, இந்த மண்ணின் குணம்.
வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும், தமிழக வரலாற்றில் எந்தக் காலக் கட்டத்திலும் தலை வணங்கியதில்லை. மகா அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்தார். அவருடைய வெற்றிப் பாதையில் தமிழகம் ஒருபோதும் இருந்ததில்லை.
மவுரிய பேரரசர் சந்திரகுப்த மவுரியரால் தமிழக எல்லையை தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. அவுரங்கசீப்பால், 'மலை எலி' என்று அழைக்கப்பட்டவர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி; அவரால் கூட தமிழகத்தை ஆட்சி செய்ய முடியவில்லை. இந்த வரலாறு, தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தான வரலாறு.இவ்வாறு அவர் பேசினார்.











மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேச்சு நடத்தணும்: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்
-
நாடகம் நடத்தும் தி.மு.க., மாநில பிரச்னைகளையும் பேசணும்; அண்ணாமலை காட்டம்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டத்திருத்தம் கொண்டு வர ஜெகன் ரெட்டி வலியுறுத்தல்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்