அரிசி ஏற்றுமதி 23 சதவீதம் உயர்வுஉள்நாட்டு நுகர்வு பாதிக்கப்படாது



அரிசி ஏற்றுமதி 23 சதவீதம் உயர்வுஉள்நாட்டு நுகர்வு பாதிக்கப்படாது


திருப்பூர்:நெல் விளைச்சல் மற்றும் மகசூல் அதிகரித்ததால், நம் நாட்டின் அரிசி ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இதனால், உள்நாட்டு நுகர்வு பாதிக்கப்படாது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசு புள்ளி விவரப்படி, கடந்த 2024 பிப்., மாதம், 8,744 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த மாதம், 10 ஆயிரத்து, 387 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் (2023-24) ஏப்., முதல் பிப்., மாதம் வரை, அரிசி ஏற்றுமதி, 77 ஆயிரத்து, 104 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின், அதே காலகட்டத்தில், 95 ஆயிரத்து, 508 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; இது, முந்தைய ஆண்டை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.
இந்தியாவில், 'பம்பர் கிராப்' என்று கூறும் அளவுக்கு, நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க கூட்டமைப்பு துணை தலைவர் துரைசாமி கூறியதாவது: நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தும் புழுங்கல் அரிசி, ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. பாசுமதி, பிரியாணி அரிசி போன்ற, உயர்ரக அரிசி ஏற்றுமதியாகிறது. இந்தாண்டு, 'பம்பர் கிராப்' என்று கூறும் அளவுக்கு, ஆந்திரா, கர்நாடகா உட்பட, பல மாநிலங்களின் நெல் சாகுபடி மகசூல் அதிகம். அதன் காரணமாக, அரிசி ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. தேவையை காட்டிலும் அதிகமாக இருப்பதுதான் ஏற்றுமதியாகிறது; இதனால் உள்நாட்டில் எவ்வித பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement