அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை

நாகப்பட்டினம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பாராட்டு பெற்ற நேர்மையான மீனவர் ஒருவர், தரமில்லாத படகை மாற்றும் விவகாரத்தில், ஆண்டுக்கணக்கில் அலைக்கழிக்கப்படும் கொடுமை நடந்து வருகிறது.
நாகை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 58. இவருக்கு ஐந்து மகள்கள். கட்டுமரத்தில் மீன் பிடித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
தரமான படகு
இந்நிலையில், மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், 2018 - 2019ம் ஆண்டு, 40 சதவீத மானியத்தில், 10 மீட்டர் நீளம் உடைய கண்ணாடி நாரிழை படகு, தமிழக மீன்வளத்துறையால் தண்டபாணிக்கு வழங்கப்பட்டது. இதற்காக மீன்வளத்துறை அறிவுறுத்தல்படி, 1.60 லட்சம் ரூபாயை தண்டபாணி, படகு கட்டுமான நிறுவனத்திற்கு செலுத்தினார்.
தரமான படகு கட்டுவதற்காக கூடுதலாக, 36,000 ரூபாய் செலுத்தியுள்ளார். 2020ம் ஆண்டு புதிய படகு தண்டபாணிக்கு வழங்கப்பட்டது. மீன் பிடிக்க சென்ற புதிய படகில், கடல் நீர் உட்புகுந்து படகு சேதமானது. அதில் தத்தளித்த மீனவர்களை அவ்வழியே வந்த மற்ற மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.
மீன்வளத்துறை அறிவுறுத்தல்படி, படகை கட்டுமான நிறுவனத்திடம் தண்டபாணி ஒப்படைத்தார். பல மாதங்களாகியும், பழுதடைந்த படகுக்கு மாற்றாக புதிய படகை, கட்டுமான நிறுவனம் வழங்காததால், நுகர்வோர் நீதிமன்றத்தை தண்டபாணி நாடினார்.
மேல் முறையீடு
சேதமடைந்த படகிற்கு இழப்பீடாக, 3.60 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழங்க மறுத்து, அந்நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில், தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுக்கும் போதெல்லாம், மீன்வளத்துறை தீர்வு காண மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தினாலும், அத்துறை தண்டபாணியை கண்டுகொள்ளவில்லை.
ஐந்து ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்த தண்டபாணி, புதிய படகு கட்டுவதற்காக கந்து வட்டிற்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் இன்னலுக்கு ஆளாகிஉள்ளார்.மீன்வளத்துறை அதிகாரிகள், படகு கட்டுமான நிறுவனத்துக்கு சாதகமாக பேசுவதோடு, கலெக்டர் உத்தரவையும் மதிக்காமல், தண்டபாணியை அலைக்கழிக்கின்றனர்.
மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ் கூறுகையில், ''படகு கட்டுமான நிறுவனம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. ''வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பின் தான் தெரியும். வாழ்வாதாரத்திற்காக வேறு திட்டத்தின் கீழ் படகு வழங்க பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
சுனாமியில், தண்டபாணி இளைய மகள் இறந்ததாக, அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. அவரது மகள் உயிருடன் ராமநாதபுரத்தில் மீட்கப்பட்டார். உடனடியாக அரசின் காசோலையை தண்டபாணி திரும்ப அளித்தார். இவரது நேர்மையை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.








மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேச்சு நடத்தணும்: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்
-
நாடகம் நடத்தும் தி.மு.க., மாநில பிரச்னைகளையும் பேசணும்; அண்ணாமலை காட்டம்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டத்திருத்தம் கொண்டு வர ஜெகன் ரெட்டி வலியுறுத்தல்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்