ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்

3

சென்னை: வள்ளுவர்கோட்டம் பகுதியில், 1,500 கிலோ ரசாயனம் கலந்த தர்ப்பூசணியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


கோடை வெயில் அதிகரித்து வருவதால், நீர், இளநீர், தர்ப்பூசணி ஆகியவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது. இவற்றை பயன்படுத்தி, பெரும்பாலானோர் தரமற்ற குடிநீர், ரசாயனம் கலந்து பழுக்க வைத்த தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.


இவற்றை தடுக்க, அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கின்றனர்.


அதன்படி, வள்ளுவர்கோட்டம் பகுதியில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் தர்ப்பூசணி கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இது குறித்து, நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:



ரசாயனம் கலந்த தர்ப்பூசணியை வெட்டிப்பார்த்தால், வழக்கத்தைவிட அதிக சிவப்பு நிறத்தில் இருக்கும். 'டிஷ்யூ' பேப்பரால் தொட்டுப் பார்க்கும்போது, சிவப்பு நிறம் ஒட்டினால், ரசாயனம் கலந்ததை அறியலாம்.


இது, முழுக்க முழுக்க கெமிக்கல் என்பதால், உணவு பொருளாக பயன்படுத்தக்கூடாது. சுவைக்காக,சர்க்கரைப்பாகுடன் கலந்து ரசாயனம் பூசப்படுகிறது. இதனால் எவ்வித வித்தியாசமும் தெரியாது. இதை சாப்பிட்டால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement